top of page

திருப்பாவை ஸாரம்

andal-3.jpg

பாசுரம் :>

வேளுக்குடி ஶ்ரீ உ. வே. கிருஷ்ணன் ஸ்வாமிகளின் திருப்பாவை உபன்யாஸத்தில் கேட்டவற்றில் சிலவற்றை, அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தினால், அடியேன் எழுத முயற்சித்திருக்கிறேன். அனைவரும் ஸ்வாமிகளின் உபன்யாஸத்தைக் கேட்டு, உயர்ந்த திருப்பாவை அனுபவம்  பெற பிராத்திக்கிறேன். ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் ..  தவறாக புரிந்து கொண்டிருந்திருப்பேன். ஆகையால் .. அடியேனே பொறுப்பு. க்ஷம்யதாம் 

 

அடியேன் இராமானுஜ தாசன்

திருப்பாவை தனியன் (ஆச்சார்யர் ஶ்ரீ பராசர பட்டர் எழுதியது)

 

नीळा-तुङ्ग स्तनगिरि-तटी सुप्तम् उद्बोध्य कृष्णम् पारार्थ्यम् स्वं श्रुति-सत-शिरस्-सिद्धम् अध्यापयन्ती ।

 

स्वोच्छिष्टायां स्रजि निगळितं या बलात्कृत्य भुङ्क्ते| गोदा तस्यै नम इदमिदं भूय एवास्तु भूयः ॥

 

தனியன் என்றால் .. பிரபந்தத்திலிருந்து தனித்து இருக்கும். பிரபந்தத்தின் பெருமை.. எழுதியவர் பெருமை..அதில் சொல்லப்பட்ட விஷயத்தின் பெருமையை உரைக்கும்.

 

நம: என்றால் ந .. ம: - நான் எனக்குரியவன் அல்லேன். பகவானின் உடமை என்கிற ஞானமாகிய பாரார்த்யத்தை கலியுகத்தில் அனைவரும் மறந்து விட்டார்கள் என, க்ருத யுகம் வரும் வரை உறங்குவோம் என்று கண்ணன் இருந்தான். ஆனால், ஆண்டாளோ (अध्यापयन्ती) ஒரு ஆசிரியை போல்... நீளாதேவியின் அவதாரமான நப்பின்னையுடன் உறங்கும் கண்ணனை எழுப்பிச் சொல்கிறாள்  “வேத, வேதாந்தத்திலிருந்து (पारार्थ्यम् स्वं) நாங்கள் உன்னுடைய சொத்து என்பதை புரிந்து கொண்டு விட்டோம். இந்தக் கலியுலகத்திலேயே அனைவருக்கும் எடுத்துச் சொல்கிறோம். ஆதலால், எழுந்திருந்து எங்களைக் காப்பாயாக” என்று உரிமையுடன் எழுப்புகிறாள். 

 

அசித் - சித் - ஈஷ்வர தத்வம்

 

ஶ்ரீமன் நாராயணனாகிய ஈஷ்வரன்- ஞான மயம்

 

ஜீவாத்மாவாகிய சித் - ஞானமுள்ளவர்

 

ஜடப்பொருளாகிய அசித் - ஞானமற்றது ஆனால் பாரதந்திரியமுண்டு. பிறருக்காகவே என்றிருக்கும்.

 

*முதல் நிலை*     

 

_ஸ்வார்த்ததை_ - சுயநலனுக்காகவே இருத்தல் 

 

*இரண்டாம் நிலை

 

_பாரார்த்ததை_ - பிறருக்காக இருத்தல்        (பர - பிறர்) 

 

*மிக உயர்ந்த நிலை*

 

_பாரார்த்ததை_ - பரமனுக்காகவே இருத்தல் (பர - பரமன்) 

 

அனைவரும், பரமனின் சரீரம், அவன் சொத்து. ஆதலால் பகவானின் சந்தோஷத்திற்காக ... பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யம் செய்ய வேண்டும்... அவன் சரீரமான அனைவருக்கும் உதவ வேண்டும்.. அனைத்தும் அவனருளாலே செய்கிறோம்.. இதில் நாம் பெருமைப் பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்கிற ஞானமே பாரதந்திரிய ஞானம்.

 

நாமே அவன் சொத்து என்பது புரியாமல், நமக்கு என்று சொத்து சேர்ப்பதில் காலத்தை வீணடிக்க வேண்டாம் என்றுதான், பாரார்த்யமே நம்முடைய பெரிய சொத்து என்பதை ஆண்டாள் புரிய வைக்கிறாள்.

 

அப்படிப்பட்ட கோதா தேவியை..எங்களுக்கு பாரார்த்ய ஞானம் அருளிய ஆண்டாளை மறுபடி மறுபடி வணங்குகிறோம் என்று ஶ்ரீ பராசர பட்டர் .. இந்தத் தனியனில் அருளுகிறார்.

 

ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம். ஶ்ரீ கோதா தேவ்யை நம: 

 

 

ஶ்ரீ வேதப்பிரான் பட்டர் அருளியது

 

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்

ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு.

 

_வேத வேதாந்தத்தின் ஸாரமான திருப்பாவையையும், அதன் அர்த்தத்தையும் அறியா விட்டால், பிறவிப்பயனை எய்த முடியாது. ஆகையால்,அப்படிப்பட்ட மானிடர் பூமிக்கு பாரமாகவே இருப்பர்

images.jfif

அவதாரிகை 1.1

 

உபதேசரத்னமாலையில் :

 

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்

தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்

பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்

வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து 

 

ஆண்டாளுக்கு முன்னர் அவதரித்த ஆழ்வார்கள் - அஞ்சுகுடி

 

1) முதலாழ்வார்கள் மூவர்

2) திருமழிசையாழ்வார்

3) நம்மாழ்வார்

4) குலசேகராழ்வார்

5) பெரியாழ்வார்

 

இப்படி ஆழ்வார்களின் சந்ததியாய் அவதரித்த ஆண்டாள், ஆழ்வார்களின் சொத்தான ஞானம், பக்தி மற்றும் வைராக்கியத்திற்கு ஒரே வாரிசு.

 

பகவான் ஒருவரே புருஷர். மற்ற அனைவரும் ஸ்தீரிகளே. மற்ற ஆழ்வார்கள் நாயிகா பாவத்தை ஏறிட்டுக் கொண்டு பாடினார்கள். ஆனால், ஆண்டாளோ   ஸ்தீரியான ஆழ்வார் ஆகையால், இயல்பாகவே நாயிகா பாவத்தில் அனுபவிக்க முடிந்தது.

 

பெரியாழ்வார்  கிருஷ்ணாம்ருதத்தை ஊட்டியே வளர்த்ததால், ஆண்டாள் பக்தியில் ஆழ்ந்து, தன் அனுபவத்தைப்  பாசுரங்களாகப் பாட ஆரம்பித்தாள். அதுவே நாச்சியார் திருமொழி ஆயிற்று. வாரணமாயிரம் எனும் பாசுரத்தில், கண்ணனை மணம் புரியுமாறு தான் கண்ட கனாவினைப் பாடினாள்.

 

கண்ணனை அடைவதற்காக ஆயற்பாடி பெண்கள் செய்த நோன்பையே தானும் மனதால் பின்பற்றி, ஏற்றுக்கொண்ட இடைப்பெண் பாவத்திற்கு தகுந்தாற்போல், அவர்கள் பாஷையில் எளிய முறையில் பாடியதே திருப்பாவை. ஆனால், அதற்குள்ளேயே அனைத்து வேத, வேதாந்தக் கருத்துக்களையும் அமைத்தாள். அவற்றை ஆச்சார்யர்கள் கருணையால் எழுதி வைத்த வியாக்கியானங்கள் மூலம் அறிய முடியும். 

அவதாரிகை 1.2

 

கலியுகத்தில், அவரவர்கள் ஆச்சார்யர்கள் மூலமாகத்தான் பெருமானைப் பற்றவேண்டும் என்பது ஸாஸ்திர நியமனம். அவரை விதையை விதைத்தால், கொடி, கொழும்பைப் பிடித்துதான் பந்தலின் மேலே ஏற முடியும். அதே போல, நாமும் ஆழ்வார் ஆச்சார்யர்கள் மூலமாகத்தான் பகவானை அடைய முடியும்.

 

ஆழ்வார்களில், முதல் பத்து ஆழ்வார்கள், தெய்வத்தையே ஆச்சார்யனாகக் கொண்டு, பெருமானை நேரே பற்றியவர்கள். ஆண்டாள் மற்றும் மதுரகவி ஆழ்வாரோ, ஆச்சார்யனையே தெய்வமாகக் கொண்டு, ஆச்சார்யர் மூலமாகவே பகவானைப் பற்றியவர்கள். கலியுகத்தில் நமக்குப் பொருந்தக் கூடிய வழி, இவர்கள் வழிதான்.

 

பகவான் ஸ்வதந்திரர். சிசுபாலன், ததிபாண்டன், சிந்தயந்திக்கும் மோக்ஷமளித்தார். ஆனால் அவரைப் பெற்ற தாய், தந்தை வசுதேவர், தேவகி, தசரதன், கௌசல்யா, வசிஷ்டர், துரோணர் யாரும் மோக்ஷத்திற்கு போகவில்லை. இவர்கள் அனைவரும்,  பாண்டவர்களும், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையே நமக்குத் தொகுத்தளித்த பீஷ்மரும் கூட ஸ்வர்காரோஹணம்தான் செய்தார்கள். ஏனெனில், ஆச்சார்ய ஸம்பந்தமில்லாததால், இவர்கள் யாரும் மோக்ஷத்தில் ஆசை கொள்ளவில்லை.  பகவானுடன் அருகிலிருக்கும் பாக்கியம் கிடைத்தும் பிறவிப்பயனை அடைய முடியாமல் போனது. பகவான், நாம் ஆசைப்படுவதைக் கொடுப்பார். நாம் சாமான்ய பலனைப் பிரார்த்தித்தால், இதை விட உயர்ந்த விஷயத்திற்கு ஆசைப்பட்டால் நன்றாக இருக்குமே, என்று அந்தர்யாமியாக இருந்து ஒருமுறை சொல்லிப் பார்ப்பார்.

 

பெருமாள், அந்தர்யாமியாக இருந்து, நமக்கு நல்வழியைக் காட்டுவார். நாம் அதன்படி நடக்காவிட்டால், நம்மை ஸ்வாதந்திரியமாக முடிவெடுக்க விட்டு விடுவார். ஆனால், ஆச்சார்யர்களோ, அதீத கருணையுடன், நாம் விழித்துக் கொள்ளும் வரையில், விடாமல் நம்மை நல்வழிப்படுத்த முயன்று கொண்டே இருப்பர். இதுதான் பகவானுக்கும் ஆச்சார்யர்களுக்குமுள்ள வித்தியாசம்.

 

பெருமாள், எப்பொழுதும் கருணாமூர்த்தியாகத்தான் இருக்கிறார். ஒவ்வொரு யுகத்திலும், மனிதர்களின் ஸத்வ, ரஜோ, தமோ குணங்களின் விகிதாசாரங்கள் வேறுபடும். குணங்களும் வேறுபடும். ஸத்வகுணம் குறைய குறைய, மோக்ஷத்தில் விருப்பம் குறையும். ரஜோ, தமோ குணங்கள் அதிகரிக்க, தற்காலிகமான இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பதற்கே ஆவல் அதிகரிக்கும்.  அதனாலேயே, பெருமாள், ஒவ்வொரு யுகத்திற்கும்  தன் அணுகுமுறையையும் மாற்றுகிறார். 

 

பல நல்ல விஷயங்கள் நம்மிடம் வருவதற்கும், பல தீய விஷயங்கள் நம்மை விட்டுப் போவதற்கும், நேரடியாக முயல்வது எளிதல்ல. ஸத்விஷயங்களைக் கேட்க கேட்க, நல்லெண்ணெங்களை, பக்தியை மனதில் விதைத்துக் கொண்டே வந்தோமானால், அந்த பக்தியே அனைத்தையும் ஸாத்தியமாக்கிக் கொடுக்கும். பக்திக்கு பகவான், அந்த சக்தியைத் கொடுத்திருக்கிறார். ஆழ்வார் பாசுரங்கள் பக்தி பரமாக இருக்குமே தவிர, ஆச்சார அனுஷ்டானங்களை வலியுறுத்தி அவ்வளவாக இருக்காது. 

 

அனுபவம் வந்து விட்டால் அனுஷ்டானங்கள், தானே கைகூடும். அனுபவமின்றி அனுஷ்டானங்களை மட்டும் செய்து வந்தால், ருசி இருக்காது. அனுபவம் மட்டுமிருந்து அனுஷ்டானங்களைச் செய்யாவிட்டால், அனாதிகால பாவம் தொலையாது. பாவம் தொலையாவிட்டால், பக்தியில் முன்னேற முடியாது. பக்தியில் நிலைப்பாடு இருக்காது. எனவே,  அனுஷ்டானத்துடன் கூடிய அனுபவம் அவசியம்.

 

அதனால்தான் பகவான்,  ஆழ்வார்களுக்கு பல்வேறு அனுபவங்களை அளித்து, அதன்மூலம் பக்தியில் தோய்ந்த பாசுரங்களைப் பாட வைத்து, எக்காலத்திற்கும் பயன்படும்படி ஆக்கி வைத்தார். 

 

வேதமனைத்திற்கும் வித்தான, பற்ற வேண்டிய முறையைக் கூறும் திருப்பாவையில் ஆழ்பொருள்கள் நிறைய உண்டு. மனதில் பிடிமானம் வரவேண்டும் என்றால் ஆழ்பொருள்களை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நம் யந்திர வாழ்க்கையிலிருந்து மாறி மனதில் வாங்குவோம். அன்புடன் பகவானை அனுபவித்தல்தான் பக்தி. ஒரு பாட்டின் முழு அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், ஒவ்வொரு பாட்டிலிருந்தும் நாம் என்னென்ன தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம்.


andal-full.gif

அவதாரிகை 1.3

 

கலியுகத்தில் மற்ற யுகங்களின் உபாயங்களை உபயோகிக்க முடியாது. ரஜோ, தமோகுணங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பகவான் தன்னை யாரும் நேரடியாக அணுகுவதை  விரும்புவதில்லை. ஆச்சார்யர்கள் மூலமாக மட்டுமே தன்னை அடைய முடியும் என்று விதித்திருக்கிறார். ஏனெனில் ஆச்சார்யர்தான் நமக்கு மோக்ஷத்தில் இச்சை ஏற்படுத்துவார். ஸத்வகுணம் உயர வழி சொல்வார். ஆகையால் அவரவர்கள் ஆச்சார்யர் மூலமாகத்தான் பெருமானைப் பற்ற வேண்டும்.

 

ஆச்சார்யர்கள்  மூலம் அஹங்காரம் தொலைந்து, பக்தியை அனுபவித்து பின்னர், தன்னை வந்து அடையட்டும் என்று பகவான் ஏற்பாடு செய்துள்ளார்.

 

ஆண்டாள் இதை வலியுறுத்தத்தான், பக்தர்கள் எல்லோரையும் எழுப்பிக்கொண்டு, பகவான் கூறிய முறை மாறாமல், பாகவதோத்தமர்களைப் பற்றிக்கொண்டு,  ஆச்சார்யர்களைப் பற்றி, பெரியபிராட்டியார், பூமாதேவி, நீளாதேவி நாச்சியார்கள் எல்லோரையும் பற்றித்தான்  கண்ணனை ஆஸ்ரயித்தாள்.

 

பெருமான், பூமாதேவியிடம்,

 

'பூமியில் அவதரித்து, 

 

1) வராஹப் பெருமானாக நான் செய்த உபதேசத்தை அனைவருக்கும் உபதேசிக்க வேண்டும்.

 

2) ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்று சொல்ல வேண்டும். 

 

3) பாகவத ஸமாகமத்தின் பெருமை உணர்த்த வேண்டும்

 

4) அனைவரும் சேர்ந்துதான் நம்மை வந்தடைய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும்

 

5) பக்தியைப் பெருக்க வேண்டும்'

 

என்று ஆணையிட, பூமாதேவியே ஆண்டாளாக (அயோனிசா) கர்ப்ப ஸம்பந்தமில்லாமல் அவதரித்தார்.

 

ஆண்டாள் பெரியாழ்வாரிடம்.. கிருஷ்ண சரித்திரத்தைக் கேட்டே வளர்ந்தார். கிருஷ்ணபக்தியினால், கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த இடைப் பெண்ணாகவே தன்னை நினைத்து, அனுகாரம் செய்து, அவர்கள் கண்ணனை அடையச் செய்த, மார்கழி மாத காத்யாயினி விரதத்தை, தானும் மேற்கொள்ள முடிவெடுத்தாள். பாவை (பொம்மை) செய்து நோன்பை அனுஷ்டித்தபடியால், திருப்பாவை என்றானது.

edf877f81e94f7eb336bfcc364b0ca7a.jpg

அஹங்காரத்தை விட்டால்தான் ஆச்சார்யன் மூலம் பகவானை அடைய முடியும்.

 

நடாதூர் ஆழ்வான் என்பவர், ஶ்ரீபாஷ்யம் பொருளரிய, திருவெள்ளறை ஸ்வாமியிடம் சென்றார். 'நீ யார்' என்று கேட்க 'நான்தான் வாத்ஸ்யவரதன்' என்று சொல்ல, ஸ்வாமியோ, 'நான் செத்து வாரும்' என்று கூறி விட்டார். அடுத்தமுறை, 'அடியேன்' என்று சொன்ன பின்தான் அர்த்தம் அருளினார்.

 

பெருமாளை அஹங்காரத்துடன் கூட பற்ற முடியும். பின்னர் ஒருநாள், குட்டுப்பட வைத்து புரிய வைப்பார். 

ஆனால், அஹங்காரம் தொலைந்தால்தான் பாகவதனைப் பற்ற முடியும்.

ஸ்வாமி தேசிகர்,

आचार्ययात् इह देवतां समदिकां 

अन्यां न मन्यामहे

ஆச்சார்யருக்கு நிகராகவோ, அவரை விட உயர்ந்ததான ஒரு தெய்வமில்லை என்று ஆச்சார்யரின் பெருமையைச் சொல்லியிருக்கிறார். 

ஆச்சார்யர்கள் நுழைவுத்தேர்வு வைக்கும் விதிமுறைகளை இராமானுஜர், செம்மைப்படுத்தி விட்டார். 

*ஓராண்வழியாய் அஹங்காரம் தொலைந்து வந்தவர்களுக்கு மட்டுமே, தந்து வந்த உபதேசித்தை, ஆசையுடையார்க்கெல்லாம் கூறுங்கள் என்று கருணையால் அளித்தார். ‘திருந்தினால் வரட்டும்’ என்றிருந்ததை, ‘ஆசையுடையவர் வரட்டும். சொல்லித் திருத்தலாம்’ என்று கலியுகத்தை உத்தேசித்து மாற்றியமைத்தார்.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்

bottom of page