
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மழையானது எப்படி பொழிகிறது என்பதை எடுத்துரைக்கும் பாடல் இது. மழை பெய்யும் நிகழ்வுகளை பகவானோடு ஒப்பிட்டுக் கூறும் ஒப்பற்ற பாசுரம். நோன்பின் பயனாக மழை பொழியும் என்பதை மூன்றாம் பாசுரத்தில் கூறிய ஆண்டாள், அந்த மழை எப்படி மழை பொழிய வேண்டும் என்பதை இப்பாசுரத்தில் கூறியுள்ளார்.
"மழை பொழிவதற்கு காரணமான வருண தேவனே! (மழைக்கு அண்ணா என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ‘மழைக் கண்ணா’ என்று கண்ணணை அழைப்பதாகக் கொள்ளலாம்) மழையாகிய நீர்க்கொடையை சிறிதும் மறைத்து வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு மேலேறி, வான் மேகங்களில் பரவி, திருமாலின் கருமேனி ஒத்த நிறம் பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய திருமாலின் வலக்கரத்தில் வீற்றிருக்கும் சுதர்சன சக்கரம் போல் மின்னலாக பிரகாச ஒளி வீசி, பரமனது இடக்கரத்தில் உள்ள பக்தர்களுக்கு ஆனந்தத்தையும் .. அவர்களின் பகைவர்களுக்கு கலக்கத்தையும் அளிக்க வல்ல .. வலம்புரி சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமனாகிய ராம்பிரானின் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக, சிறிதும் தாமதியாமல், மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், பூவுலகெங்கும் பெருமழை பொழிவாய்!" , என்று கைங்கர்யம் வேண்டி வந்த வருண தேவனிடம் கூறுகிறாள்.

இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.
ஆழிமழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்
ஒன்று நீ கை கரவேல் - மூன்று மகாமந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்
ஆழியுட் புக்கு - வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து
முகந்து கொடு - அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து
ஆர்த்தேறி - கம்பீரமாக எழுந்து
ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து - கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால், ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்! (பரந்தாமனின் எல்லையற்ற கருணையாக ஆச்சார்யர் உருவகம் பெறுகின்றனர்!)
இங்கே "மேகம்" என்பது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது. மேகம் போலவே ஆச்சார்யர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல், ஞானத்தை வழங்குகின்றனர்!
எவ்வாறெனில், மேகமானது, கடல் நீரை உட்கொண்டு, பூவுகலகிற்கு நன்மை பயப்பது போல, இவ்வடியார்களும், பகவத் அனுபவத்தில் (பரமன் துயில் கொண்டுள்ள கடலாகிய உருவகம்!) திளைத்து அதன் வாயிலாக கிட்டிய ஞானத்தை (மழையாகிய உருவகம்!) இப்பூவுலகில் நிறைத்திருக்கிறார்கள்!
கடலில் கலந்திருக்கும் உப்பைப் போன்ற, புரிந்து கொள்ள கடினமான விஷயங்களையும் எளிமையாக (உப்பு சுவையில்லாத மழை நீர் போல) அளிக்க வல்லவர்கள் ஆச்சார்யர்கள்!
ஆழிபோல் மின்னி - திவ்யஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற
ஆச்சார்யர்கள் (ஞானத்தால்ஒளி பெற்றதால்!) திருச்சக்கரமாகவும் உருவகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!
வலம்புரி போல் நின்றதிர்ந்து - ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் - ஞானத்தை மழை போல் பொழிந்து
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் - (மோக்ஷத்தை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில் நாங்கள் சரண் புகுந்தோம் ("மார்கழி நீராட" என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)
இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான "ழ" என்ற எழுத்து "ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து" என்று பதினோரு முறை வருவதைக் காணலாம்.

பகவானுக்கு யார் தொண்டு புரிகிறார்களோ .. பக்தர்களாக இருக்கிறார்களோ .. அவர்களுக்குத் தொண்டு புரிய வேண்டுமென்று தேவர்களுக்கும் ஆசை பிறக்கும்.
முதல் படி தேவர்களும், மனிதர்களும் ஒருவக்கொருவர் உதவிக் கொள்வது.
கீதை 3.11
देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ॥११॥
இறுதிப்படி, தேவர்கள் பாகவதர்களிடம் கைங்கர்யம் வேண்டுவது.
பரம பாகவதானாக ஒருவர் இருப்பாரேயானால் அவர் நிழலிலே ஒதுங்கி வர்திக்க வேண்டும் என்பதற்கேற்ப.
அதனால்தானோ என்னவோ .. வருணதேவனும் ஆண்டாளிடம் கைங்கர்யம் வேண்டி வந்து நின்றார்.
பிரபந்னனுக்கண்டான லக்ஷண பூர்த்தி உண்டாமால், தேஹாவஸானே மோக்ஷம் என்பது நிஸ்சியம்.
காஞ்சி பெருமாள் வரதர், திருக்கச்சி நம்பிகள் மூலம் இராமானுஜருக்கு அருளிய ஆறு வார்த்தைகளில் ஒன்று
தேஹாவஸானே முக்தி ஸ்யாத்.
ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களுடனுன் இருக்கும் பக்தருக்கு .. இந்தப் பிறவியின் முடிவில் .. தேகத்தை விட்டவுடன் முக்தி நிச்சயம்.
(ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம் )
புறம்புண்டான பற்றுகளை அடைய வாசனையோடே விடுகையும்
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்குத் துவரிக்கையும்
இருக்கம்நாள் உகந்தருளின நிலங்களிலே பிரவணனாய் போருகையும்
குணானுபவ கைங்கர்யமே போதுபோக்காக கழிக்கையும்
இப்படி இருக்கும் ஶ்ரீவைஷ்ணவனுடைய ஏற்றமறிந்து அவரிடத்தில் ப்ரீதி கௌரவத்தோடே வர்த்திக்கையும் திருமந்திரத்திலும், த்வயத்திலும் பிரவணனாய்ப் போருகையும்
ஆசாரியன் பக்கலிலும், பகவான் பக்கலிலும் பிரேமமும் உபகார ஸ்மிருதியும் நடக்க வேணும்
ஞானமும், விரக்தியும், சாந்தமும் உடையவரோடே சகவாஸம் பண்ணுகையும்
இப்படி இருக்கிற ஶ்ரீவைஷ்ணவனுடைய நிழலிலே ஒதுங்குகையும் பிரபன்னாதிகரிக்கு அவஸ்யாபேட்சிதம்.
பரம பாகவதனுக்குண்டான தகுதிகள் நமக்கு எப்பொழுது வாய்க்கும் என்பது தெரியாவிட்டாலும் .. இப்படிப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய ஒரு பக்தரைப் பற்றி அவருடன் கைங்கர்யங்களில் பங்கு கொண்டாலே பகவான் உகக்கிறார்.
முதல் மூன்று பாசுரங்களில் ஆண்டாள் நீராட்டம் பற்றி பாடியதால் .. மழைக்கு அதிபதியான வர்ண தேவன் ஆண்டாளிடம் கைங்கர்யம் வேண்டி வர .. ஆண்டாள் ‘ஊழி முதல்வனைப் போல் பாரபக்ஷமில்லாமல் அனைவருக்கும் மழை பொழிவாயாக’ என்று கைங்கர்யம் அருளுகிறாள். (ஊழி முதல்வன்)
நம் ஆசார்யர்கள் , ரஹஸ்யார்த்தங்களை எங்கெல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமோ, அங்கு நிச்சயமாகக் கோடிட்டுக் காட்டுவார்கள்.
ஸ்வாமி நம்பிள்ளை நாலாம் பத்து, ஈடு பிரவேஶத்தில், முதல் மூன்று பத்து, த்வயார்த்தத்தின் உத்தர வாக்கியத்தையும், அடுத்த மூன்று பத்து, பூர்வ வாக்கியத்தையும் அநுஸந்திப்பதாகக் காட்டுவர்.
ஈட்டுப் பெருக்கரான நம் பெரிய ஜீயர் , சரமஶ்லோகத்தை இப்படி நமக்கு எடுத்துக் கொடுக்கிறார் முமுஷுப்படி–த்வயார்த்தம் 116 சூத்திரத்தில்…
புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடே விடுகையும் ...
எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையும் …
இதற்கு வியாக்கியானம் அருளுகையில், மாமுனிகள், இவ்விரு வாக்கியதிற்கும் பொருள் உரைப்பதோடு ..
இவ்விரண்டு வாக்கியத்தாலும், சரமஶ்லோகத்தின் பூர்வார்த்தம் சொல்லப்படுகிறது என்றுரைக்கிறார்.
எங்ஙனே என்னில்,
புறம்புண்டான பற்றுக்களையடைய ====ஸர்வதர்மான் என்கிற பதத்தின் அர்த்தத்தையும்
வாசனையோடு விடுகையும்==பரித்யஜ்ய என்ற பதத்தின் அர்த்தத்தையும்
எம்பெருமானை====மாம் என்ற பதத்தின் அர்த்தத்தையும்
ஏ====என்ற ஏகாரத்தால் ஏக பதத்தின் அர்த்தத்தையும்
தஞ்சம் =என்கையாலே ஶரண பதத்தின் அர்த்தத்தையும்
பற்றுகை =என்று வ்ரஜ பதத்தின் அர்த்தத்தையும் அடைவே சொல்லுகையாலே.
பெரிய ஜீயர் மணவாள மாமுனிகள் வ்யாக்கியானம் இடுவதின் காம்பீர்யம் இதிலிருந்து கை இலங்கு நெல்லிக் கனி. முதற்கண் , சரம ஶ்லோகத்தின் அர்த்தம் இவை என்று கோடிட்டு காட்டியதும், பின் அதனை விளக்கியும், அடைவே சொல்லுகையாலே“ என்று இதன் கருத்தை அறுதி இட்டதும், என் என்று சொல்லுவது?!
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்