top of page

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

பையத்துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

 

திருப்பாவை பாசுரம் 2.1

 

முதல் பாசுரத்தில் பிரபன்னன் - சரணாகதனுக்கு வேண்டிய ஸ்வரூபம் - தகுதியைச் சொன்னாள். இந்த பாசுரத்தில் பிரபன்னனுக்கு வேண்டிய நிஷ்டை (உறுதி) - இதன்படிக்குத்தான் நான் இருப்பேன்; இதன்படி இருந்து நான் அடைய வேண்டியதை அடைவேன்; இந்த மார்கம் உன்னிடம் கொண்டு சேர்க்கும்; அது சேர்க்கும் வரைக்கும் விடாமல் தொடர்வேன் - எனும் உறுதியைச் சொல்கிறாள். ‘பகவானைத் தவிர மற்றொன்றில் விருப்பம் வைக்கக்கூடாது’ என்னும் நிஷ்டையான பக்தி நிஷ்டையைச் சொல்கிறாள்.

 

முதல் பாசுரத்தில் சொன்னாற்போல் “நாராயணனை அடைவது ஒன்றே விருப்பம் .. அதையும் அவரை வேண்டியே, அவர் துணை கொண்டே அடைவோம் என்று உறுதியுடன் இருப்பவர்கள் கோஷ்டியுலுள்ள _நாம்_”, _நம்முடைய_ நோன்பிற்காக செய்ய வேண்டிய செயல்களைச் சொல்கிறாள். நோன்பு காலம் என்பது ஒரு சரணாகதன் .. தான் பகவத் பிரபாவம் அறிந்து சரணடைந்ததிலிருந்து .. முக்தி அடையும் வரை இருக்கும் காலம்.

 

இந்த பாட்டில், க்ருத்ய அக்ருத்ய விவேகம் - செய்யத் தகுந்தன, விடத் தகுந்தன எவை எவை என்று கூறுகிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும் .. இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழல்வோம் என்று விவரமாக சொல்கிறாள். இவ்வாறு நடப்பதன் மூலம் .. அவ்வுலகத்தில் மட்டுமல்ல .. கலியுகமாக இருந்தாலும் ..  இவ்வையத்திலேயே வாழ்ச்சிதான் என்கிறாள். 

 

‘கேளீரோ’ என்று சொல்லி .. மிக முக்கியமான விஷயமாதலால் விழிப்புணர்வுடன் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.

 

பாற்கடலுள் பையத் துயின்ற .. ஜகத்ரக்ஷண சிந்தனையுடன் நிஷ்சிந்தையாக யோகநித்ரை செய்து வரும் பரமன் (நிகரற்றவர்) அடி பாடி, நாம் செய்ய வேண்டியவற்றையும் விட வேண்டியவற்றையும் பார்ப்போம் என்று அழைக்கிறாள். 

 

விட வேண்டிய விஷயங்களைப் பற்றிக்கொண்டே .. பற்ற வேண்டியவற்றையும் பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஸாத்தியமில்லை. விட வேண்டியவற்றை சிறிது சிறிதாக விட ஆரம்பித்தால்தான் .. பற்ற வேண்டியவற்றைப் பற்றிக் கொள்வதற்கு நேரமும் கிடைக்கும் .. மனமும் இசைந்து கொடுக்கும்.  முதலில் எவற்றை விட்டால் எதனைப் பற்றலாம், பின்னர் பற்றியதன் துணை கொண்டு மேலும் எவை எவற்றை விடலாம் ..    எவற்றையெல்லாம்  பற்றலாம் என்கிற க்ரமத்தை (வரிசையை)  எடுத்துரைக்கிறாள் .. நாம் நிதானமாக ஏறும் வகையில் அழகான படிக்கட்டை அமைத்துத் தருகிறாள்.

 

போகப் பொருட்களை தவிர்ப்போம்! யோகப் பொருட்களைக் கொள்வோம்!

 

1) “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்பதன் மூலம், ஏதேனும் இரண்டு போகப் பொருட்களை (செயல்களை) விட்டால் .. “நாட்காலே நீராடுதல்” போன்ற ஒரு யோகத்தைக் கொள்வது சாத்தியமாகும் என்கிறாள். 

 

தற்காலத்தை எடுத்துக் கொண்டால் .. காலையில் எழுந்துடன் “காலை பானம் அருந்துதல், உலக செய்திகளைப் படித்தல்/பார்த்தல், லௌகீக விஷயங்களை/மற்றவர்களைப் பற்றி பேசுதல், தொலைபேசி/தொலைக்காட்சியில் கேளிக்கை விஷயங்களைப் பார்த்தல்” போன்ற விஷயங்களைத் தவிர்த்தால் அல்லது சிறிது தள்ளிப்போட்டால் .. எழுந்தவுடன் நாட்காலே நீராடுதல் என்கிற ஒரு நல்ல விஷயம் கைகூடும். ஸத்வ குணம் ஓங்கியிருக்கும் காலை வேளையில் நீராடுதல் .. அனுஷ்டானம் மற்றும் பகவத் சிந்தனத்திற்கு வழிவகுக்கும்.

 

ஏதேனும் இரண்டு லௌகீக/கேளிக்கை  விஷயங்களுக்காக செலவிடும் நேரத்தை சிறிது குறைத்துக் கொண்டால் .. பகவானைப் பற்றி கேட்கவும், பேசவும், ஆத்ம-பரமாத்ம சிந்தனத்திற்கும், பிறவிப் பயனை எய்த என்செய்ய வேண்டும் என்று தெரிந்தவர்கள் வாயிலாக கேட்டு அறிந்து கொள்ளவும் சிறிது நேரம் கிடைக்கும் ... லௌகீக விஷயங்களிலிருந்து சிறிது சிறிதாக விலக ஆரம்பிக்கும் போது .. ஸத்வ குணம் உயரந்து .. உயர்ந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் பிறக்கும்.

 

ஏதேனும் இரண்டு விட வேண்டிய விஷயங்களை விட்டு .. பற்ற வேண்டிய ஏதேனும் ஒன்றைப் பற்றினால் கூட அதன் துணை கொண்டு மேலும் நான்கு விட வேண்டிய விஷயங்களை விடுவது ஸாத்தியமாகும்.

 

2) ஆத்ம சிந்தனம் வளர வளர .. தேகமே ஆத்மா என நாம் மயங்கி இருந்த நிலை மாறி .. தற்காலிகமான தேகத்திற்காக நாம் செலவிடும் நேரத்தையும் .. சிந்தனையையும் குறைத்துக் கொள்வது ஸாத்தியமாகும். “மையிட்டெழுதோம் .. மலரிட்டு நாம் முடியோம்” என்பதன் மூலம் இந்த தேகத்தை அழகு படுத்துவதற்காக .. எங்கள் மகிழ்ச்சிக்காக என்று நாங்கள் எதையும் செய்ய மாட்டோம்...உன் பிரஸாதமாகக் கிடைக்கும் புஷ்பத்தையே விரும்பி அணிவோம்” என்று கூறுகிறாள். 

 

ஆண்டாள் கூறிய முறைப்படி .. சிறிது சிறிதாக விட வேண்டியவற்றை விட்டு பற்ற வேண்டியதைப் பற்ற முயற்சிப்போம்.  பின்னர் ... மேலும் ஆண்டாள் .. எதை எதை விடுத்து எவற்றைப் பற்றச் சொல்கிறாள் என்பதைப்பார்ப்போம்

02-vaiyathe1.gif

திருப்பாவை பாசுரம் 2.2 

 

3) தேகாபிமானம் குறைய குறைய தேகத்தைப் பற்றிய சிந்தனை குறைந்து தேகத்திற்குள்ளிருக்கும் ஆத்மாவைப் பற்றிய சிந்தனை வளரும். ஆத்ம, பகவத் விஷயத்தைப் பற்றி கேட்க, அறிய  ஆரம்பித்த பின்தான் அந்த ஞானமாகிய ஸாகரம் எவ்வளவு பெரியது என்பது புரியும். 

 

பின்னர், ஆச்சார்யர்கள் மற்றும் பெரியோர்களிடம பணிவுடன் விஷயங்களைக் கேட்க ஆரம்பிப்போம்.

 

ஆச்சார்யர்களின் உபதேச முத்திரையானது .. 'ஒரு பொருளைத்  தேர்ந்தெடுத்துக் கொடுப்பது' போன்ற முத்திரையைப் போல இருக்கும். அவர்கள்   அவரவர் ஆச்சார்யர்கள் வாயிலாக அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தாலும் நம் சிற்றறிவிற்குக் கொள்ளும் அளவிற்கு .. பெரிய ஸாகரத்திலிருந்து ..  விஷயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பர்.

 

நமக்கு அந்த விஷயம் புரிந்து கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டோமென்றால் .. அதற்கடுத்த விஷயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பர். 

 

பின்னர் 'முன்னோர் சொற்படி கேட்டு நடத்தலே நல்லது' என்று மனம் இசைந்து கொடுக்கும்.

 

இவ்வளவு விஷய ஞானம் உள்ளவர்கள் .. ஒரு விஷயத்தைச் செய்யாமல் விட்டிருந்தாலோ அல்லது 'ஒரு செயலைச் செய்யாதே' என்று சொல்லியிருந்தாலோ .. நிச்சயம் நம் நன்மையை உத்தேசித்துதான் .. அவ்வாறு சொல்லியிருப்பார்கள் என்கிற புரிதல் ஏற்படும்.

 

அதனால்தான் ஆண்டாள்,   'முன்னோர் *செய்யாதன செய்யோம்*' என்பதை அடுத்தபடியாக அறிவுறுத்துகிறாள்.

 

முன்னோர் செய்யாதவனற்றை விட்டால் பின்னர் அவர்கள் 'செய்' என்று சொன்னவற்றை செய்யும் முயற்சியில் இறங்குவோம்.

6100_111962773154_106234748154_2345410_2

ஸத்விஷய ஸம்பந்தம் இல்லாமல் .. சரீராத்ம பாவத்துடன் .. லௌகீக மற்றும் கேளிக்கை விஷயங்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் .. ரஜோ, தமோ குணங்களின் அதிகமான பாதிப்பால் ..  ‘முன்னோர் சொற்படி நடக்க வேண்டும்’, ‘முன்னோர் செய்யாதன செய்யோம்’ என்பவற்றை ஏற்றுக்கொள்ள மனம் இசையாது.

 

ஆகையால்தான் ஆண்டாள் முதல் படியாக _சிறிது போகத்திலிருந்து விலகி .. ஏதாவதொரு ஸத்விஷயத்தில் (ஸத்வகுணம் ஓங்கியிருக்கும் அதிகாலையில் நீராடுதல்,  ஒவ்வொரு நாளும் பகவத் விஷயங்களைக் கேட்க சிறிது நேரமாவது ஒதுக்குதல்) ஈடுபடச் சொல்கிறாள்_. 

 

பகவத் விஷயத்திற்கு .. அனைவரையும் ஆகர்ஷிக்கும் சக்தி உண்டு. அதன்பால் சிறிது சென்றாலும் .. அதன் துணையால் .. ஆத்ம சிந்தனம் ஸித்திக்கும். தேகாபிமானம் குறைந்து ஆத்ம பரமாத்ம சம்பந்தம் புரிய ஆரம்பிக்கும் வேளையில்  .. அடுத்தபடியாக .. _தற்காலிகமான  தேகத்திற்காக செலவிடும் நேரத்தை விட்டு விலகச் சொல்கிறாள்_.  நமக்காக என எதுவும் செய்யாமல்.. பகவான் சூடிக்களைந்த புஷ்பம்... அவர் கண்டருளிய பழம், பிரசாதம் ஆகியவற்றை அனுபவிப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை உணர வைக்கிறாள்.

 

அதன் பின்னர், பகவத் சம்பத்தத்தால் மேலும் சிறிது ஸத்வ குணம் ஓங்கி மற்ற குணங்கள் குறைந்திருக்கையில். ‘முன்னோர் செய்யாதனவற்றை செய்யாமலிருப்பதன் முக்கியத்துவத்தை’ அடுத்த படியாக உணர்த்துகிறாள்.

 

இந்நிலையில்தான் “பகவான் தன் அதீத கருணையினால் ஒவ்வொரு ஜீவாத்மாவும் தன்னுடன் சேர்ந்து .. என்றும் மாறா .. நிலையான ஆனந்தத்தைப் பெற, ஒவ்வொரு ஜீவாத்மாவையும் கனிய வைக்க, எங்ஙனம் பொறுமையுடன் நம்முடைய பல ஜன்மங்களாக  அயராது முயன்று கொண்டிருக்கிறார்” என்பது புரியும்.

 

ஒவ்வொரு யுகத்தையும் மற்றும் ஒவ்வொரு மனிதனின் இயல்பையும், சக்தியையும் மனதில் கொண்டு .. எந்த யுகத்திலும் .. எவரும் .. சிறிது முயன்றால்   எளிதில் தன்னை வந்தடையும் வண்ணம் .. நேர்த்தியான ஸாஸ்திரத்தை வடிவமைத்து .. சதுர் வேதங்களின் மூலம் தெளிவு படுத்துகிறார். தானே பலவித அவதாரங்கள் எடுத்து மேலும் தெளிவுற நடந்து காட்டி .. உபதேசித்து .. இதிகாச புராணங்களைத் தருகிறார் ..  பின்னர் வேதாந்தார்த்தங்களையெல்லாம் ஆழ்வார்கள் வாயிலாக .. பக்தி பாவனையோடு பாசுரங்களாக வெளிவரச்செய்து .. அவையனைத்திற்கும் ஆச்சார்யர்களைக்கொண்டு .. மூவாயிரப்படி ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி என அளவிலா வியாக்கியானங்களை அருளிச் செய வைத்து அவற்றின் மூலம் ஆழ்ந்த பொருள்களைப் புரிய வைக்கிறார்.  ஆங்காங்கே அர்ச்சாவதாரமாகக் கோவில்களில் எழுந்தருளி .. இவை போதாதென்று ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து .. தன் பக்கம் திரும்ப வைக்க சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறார். 

 

இவையனைத்தையும் புரிந்து கொள்ளாமல் வெளியுலகையே பாரத்துக்கொண்டிருப்பவரை திருத்திப் பணி கொள்ள .. தன்னிடமிருந்து தொடங்கி என்றென்றைக்கும் இருக்கும் வண்ணம் ஆச்சார்ய  பரம்பரையை அமைத்து  ‘ஒரு உழவன் நிலத்தை உழுது .. விதை விதைப்பதிலிருந்து .. பயிரை வளர்ப்பதற்கு செய்வது போல்’ அனைத்து முயற்சிகளையும் செய்து  ‘என்று க்ருஷி பலிக்கும்! ஒரு ஜீவன் கனியும்’ என்று காத்திருக்கிறார் என்பது அனைத்தும் ஒவ்வொன்றாக புரிய ஆரம்பிக்கும்.

 

“இராமன் செய்தது சரியா? கிருஷ்ணர் செய்தது சரியா? என்று அவற்றை அறியாதவர்கள் கூடி விவாதிப்பதுதான் சரியல்ல; எந்த இதிகாசங்களின் மூலமாக இராமர் கிருஷ்ணரைப் பற்றி அறிந்து கொண்டோமோ, அந்த இதிகாசங்களிலிருந்தே அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று விளக்க வல்ல ஆச்சார்யர்களைப் பணிவுடன் அணுகிக் கேட்டால்தான் தெளிவு பிறக்கும்” என்பது புரியும். 

 

எக்காலத்திற்கும் ஏற்றபடி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஸாஸ்திரத்தை .. இக்காலத்திற்கு ஏற்புடையது அல்ல என்று கூறி நம் விருப்பத்திற்கு மாற்றியமைக்க வாய்ப்பில்லை என்பதும் புரியும்.

 

ஞானம் அனுஷ்டானமுடைய முன்னோர்கள் .. ‘செய்யாதே’ என்று ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்க வேண்டுமென்றால், அதிலுள்ள ஆபத்தை உத்தேசித்துதான் சொல்லியிருப்பார்கள் என்கிற புரிதலுடன் அவற்றிலிருந்து விலகியிருத்தலே நன்மை பயக்கும் என்பதையே *செய்யாதன செய்யோம்* என்று ஆண்டாள் அறிவுறுத்துகிறாள்.

unnamed.jpg

ஆண்டாள் கிளி

 

சொன்னதையே திருப்பிச் சொல்லும் தன்மை வாய்ந்த கிளிக்கு சம்பிரதாயத்தில் எப்பொழுதும் விசேஷ முக்கியத்துவம் உண்டு. ஆச்சார்யர்கள்.. கருணையினால்  அளவிலா அர்த்தங்களை வர்ஷித்திருக்கையில் .. அவற்றில் ஆயிரத்தில்.. லட்சத்தில் ஒரு விஷயத்தை.. விஷயமறிந்த பெரியோர் வாயிலாக சரியாக கிரஹித்துக் கொண்டு அவற்றை அப்படியே அக்ஷரம் பிசகாமல் மற்றவர்களிடம்  திருப்பிச் சொன்னாலே போதுமானது. நாமாக புதிதாக கண்டுபிடித்துச் சொல்வதற்கு எதுவுமில்லை. மாற்றிச் சொல்வதும் கூடாது என்பதால்தான் கிளி போல இருக்க வேண்டும் என்பர்.

 

அதுவும், ஆழ்வார்களின் ஒரே சந்ததியான ஆண்டாள்.. அவர்களின் அருளிச் செயல்களின் சாராம்சமாக அருளிச் செய்தவற்றைத் திருப்பிச் சொல்லும் பேறு பெற்ற கிளி மற்றும் ஆண்டாளுக்காக அரங்கனிடம் தூது போன கிளியானதால் ஆண்டாளின் கிளி விசேஷமாகப் போற்றப்படுகிறது.

1544865928-8606.jpg

திருப்பாவை பாசுரம் 2.4

*தீக்குறளைச் சென்றோதோம்*

 

நாம் கொள்ள வேண்டிய ஒவ்வொரு ஆத்ம குணமாக அருளிச் செய்த ஆண்டாள், அடுத்தபடியாக _தீக்குறளைச் சென்றோதோம்_ என்ற முக்கியமாகக் கொள்ள வேண்டிய ஆத்ம குணத்தை அறிவுறுத்துகிறாள். ஒருவரைப் பற்றி அடுத்தவரிடம் குறை சொல்வது பல கோணங்களில் அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

மற்றவரிடம் குறை காணுதல் வெகு சுலபம். அதில் ருசி வந்து விட்டால், நம்மைப் பற்றி ஆராய்ந்து நம்மை முன்னேற்றிக் கொள்வதற்கு நேரமும், விருப்பமும் குறைந்து விடும். அதே போல், நம்மைப்பற்றி சிந்தித்து நம்மை முன்னேற்றிக் கொள்ள முயல ஆரம்பித்து விட்டால், அடுத்தவர்களின் குற்றத்தைப் பார்க்க நேரமும் விருப்பமும் இருக்காது.

 

நம் குழந்தைகள், தெரிந்தவர்களின் செயல்கள் .. ஸாஸ்திரத்தில் உள்ள படியும், நம் முன்னோர் வாக்கின்படியும் .. அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் அவரவர்களிடம் நேரடியாகத் தெரியப்படுத்தலாம். அதனால் நன்மை உண்டாகலாம். ஆனால், எவருக்கும் உபயோகமின்றி .. ஒருவர் செய்வது சரியில்லை என்று மற்றவரிடம் குறைகூறுதலே தீக்குறளைச் சென்று ஓதல் எனப்படும். நாம் மற்றவரிடம் சென்றோதலைத் தவிர்ப்பதோடு, யாரேனும் நம்மிடம் வந்து ஓதினாலும் அதையும் தவிர்க்க வேண்டும்.

 

மற்றவர் குறைகளைப் பற்றி நாம் பேசும்போது ரஜோ குணம் உயர்ந்து, நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய ஸ்வஅபிமானமும் அதிகரிக்கும். அதனால், அஹங்கார மமகாரத்திலிருந்து வெளிவருதலும் கடினமாகும். 

 

ஒருவேளை நாம் குற்றம் சொல்லும் நபர் பகவானின் பக்தராக, அவருக்கு பிரியமானவராக இருக்கும் பட்சத்தில், அது _பாகவத அபசாரம்_ எனும் பெருங்குற்றத்தில் முடியும். ஒரு பக்தனை பகவான் விரும்பி ஏற்றுக் கொண்ட பின், பகவானே அவர் குற்றத்தைப் பொறுத்து திருத்தி ஆட்கொள்ள முடிவெடுத்த பின்.. அந்த பக்தரிடம் யாரேனும் அபசாரப் பட்டால் .. அவரைப் பற்றித் தவறாக நினைத்தால் கூட .. உள்ளத்தில் இருக்கும் பகவான் சீற்றம் கொள்கிறார். தன்னிடம் அபசாரப்பட்டால் கூட பொறுக்கக் கூடிய பகவான் தன் பக்தரிடம் ஒருவர் அபசாரப்பட்டால் .. அந்த பக்தரே அதை மனதில் கொள்ளா விட்டாலும் கூட.. தான் மனதில் கொள்கிறார். 

 

ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்? *

ஆரது சொல் நேரில் அநுட்டிப்பார்? – ஓர் ஒருவர்

உண்டாகில் அத்தனை காண் உள்ளமே! * எல்லார்க்கும்

அண்டாதது அன்றோ அது? (55)

- உபதேச ரத்னமாலை -

 

என்று பெருமை வாய்ந்த ஶ்ரீவசனபூஷணத்தில் ஸ்வாமி பிள்ளை  லோகாச்சார்யர் அருளியது :

 

_ஞானமனுஷ்டானம் இல்லாவிட்டாலும் பாகவத சம்பந்தமிருந்தால், (ஜன்மவிருத்தாதி நியமமில்லை) அவர் நம்மை நேர் வழியில் செலுத்தி மோக்ஷம் வாங்கிக் கொடுத்து விடுவார்_.

 

_ஆனால், ஞானமனுஷ்டானம் இருந்தாலும் ஒரு பாகவதரிடம் அபசாரப்பட்டிருந்தால் கூட ..  மோக்ஷப்பிராப்தி இல்லை_

 

அதனால்தான் ஆண்டாள் தீக்குறளைச் சென்றோதலை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறாள். 

 

ஆத்ம குணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் 'நம்மில் இருக்கும் பகவான்தான் மற்றவருக்குள்ளும் உள்ளார்' என்கிற புரிதல் வந்து விடும். அவரிடம் குற்றம் இருந்தால் கூட .. 'பல ஜன்மங்களாக நம்மில் பொறுமையாக இருந்து நம்மைத் திருத்தி ஆட்கொண்ட பகவான் அவரையும் பொறுத்து திருத்திப் பணி கொள்வார்' என்பதும் புரிந்து விடும். 

 

_மற்ற பாகவதர்கள் மூலம் .. நமக்கு பகவான் உணர்த்திய விஷயங்களை .. இயன்றவரை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தாலே போதுமானது_ என்று மனம் அமைதிப்படும்.

 

போகத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி .. சில நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தி .. தேகாபிமானம் குறைந்து ..  முன்னோர் செய்யாதனவற்றிலிருந்து விலகி .. தீக்குறளைச் சென்றோதலைத் தவிர்த்து என ஐந்து படிகளை எடுத்துச் சொன்ன ஆண்டாள் .. அடுத்த படியாக _ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் பகவானிடம் கைகாட்டி செய்ய வேண்டியதின் அவசியத்தை அறிவுறுத்துகிறாள்_.

 

download.jfif

திருப்பாவை பாசுரம் 2.5

 

*ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி* :

 

_धर्मो रक्षति रक्षितः_

 

எது நம்மை தாங்குமோ அதை தர்மம் என்று சொல்கிறோம். தர்மத்தை நாம் காப்பாற்றினால், அது நம்மை காப்பாற்றும். ஒருவர் தன்னுடைய இஷ்டத்திற்கு தர்மம் செய்ய முடியாது. வேதம் போதித்த இஷ்ட சாசனத்தை பெற்றுக்கொடுப்பது தான் தர்மம். இதிகாசங்கள், புராணங்கள் 'இது தர்மம்' என்று சொல்லி இருக்க வேண்டும். அந்த தர்மத்தை செய்தால் புண்ணியம் கிடைக்கும். அதர்மத்தை செய்தால் பாவம் கிடைக்கும். தர்ம காரியத்தில் ஈடுபடாமல் இருந்தாலும் பாவம் கிடைக்கும்.  

 

தர்மத்தை உடல், மனம், வாக்கினால் செய்ய வேண்டியது என்று மூன்று வகையாக பிரிக்கலாம். முதலாவது *உடல் தர்மம்*. இது உடலால் எல்லோருக்கும் உதவுவது. அதில் முக்கியமானது தானம். குளம் வெட்டுதல், மரம் நடுதல், ஏழைகளுக்கு உதவுதல், கோவில் கட்டுதல், நம்மிடம் உள்ள அரிசி பருப்பு கொடுத்தல் இதில் அடக்கம். வித்யா தானமும் சிறந்தது. தன்னிடம் இருப்பதை கொடுப்பது தானம். கொடுத்ததன் பலனை எதிர்பார்க்கக்கூடாது. ஈடுபாடு இல்லாமல் தானம் கொடுக்க கூடாது. இருப்பவைகளில் சிறந்தவற்றை மற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக் கூடாது.

 

இரண்டாவதாக, *வாக்கு தர்மம்*. தீய சொல் பேசாமையை குறிக்கும். பகவத் விஷயங்களைப் பேசுவதற்கும், தர்ம காரியத்திற்காகவும் நமது வாக்கு பயன்பட வேண்டும். ஒரு கோவில் அல்லது பள்ளிக்கூடம் கட்டும் பணி நடக்கும் என்றால், அங்கு வாக்கு தர்மம் முக்கிய பங்காற்றுகிறது. 

 

மூன்றாவது *மன தர்மம்*. எப்போதும் எல்லோரும் நன்றாக இருப்பது என்று நினைப்பது மன தர்மம். கடலால் சூழப்பட்ட இந்த மொத்த உலகமும் வாழ வேண்டும் என்று நினைப்பது தான் தர்ம வாழ்க்கை. 

 

நம் சிந்தனைகளையும் உயர்த்தி, உயர்ந்த சொற்களைப் பேசி, உயர்ந்த செயல்களைச் செய்து வந்தால் மனம் பண்படும்.

 

ஆகையால் ஆண்டாள்.. தான, தர்மங்களை இயன்றவரையில் (‘ஆந்தனையும்’ என்றால் அதிகப்படியாக நம்மால் செய்ய முடிந்தது) செய்ய வேண்டியதின் அவசியத்தையும், அதையும்.. நாம் செய்கிறோம் என்ற எண்ணமின்றி .. பகவான் நம்மைக் கொண்டு செய்விக்கிறார் என்ற நன்றியுணர்வுடன், பலனை எதிர்பாராமல்.. எந்த ஒரு நல்ல செயலையும் பகவானைக் கைகாட்டியே செய்ய வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறாள். 

 

ஜீவாத்மாவின் ஆணைப்படியே .. சரீரத்திலிருக்கும் ஒரு பாகத்திற்கு உதவி தேவைப்பட்டால் கையாகிய மற்றொரு பாகம் உதவுகிறது.  இதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு .. தன் முயற்சியால் உதவியதாக நினைத்துக் கொள்ள வாய்ப்பில்லை. அதே போல் .. பகவான் கிருஷ்ணர் கீதையில் காட்டிய  விஸ்வரூபத்தில் .. தன் சொத்து என்று உலகனைத்தையும் தன் மேனியில் காட்டியது .. நம் மனதில் நன்கு பட்டு விட்டால் .. பகவான் .. அவர் சரீரத்தின் ஒரு பாகமான நம்மைக் கொண்டு .. மற்றொரு பாகமான இன்னொருவருக்கு உதவுகிறார் என்பது தெளிவாகப் புரிந்து விடும்.

 

 

அவர் ஆணைப்படி நடக்கத் தயாராக நாம் இருந்தால் .. பாகமாகிய நாம் செயலிழக்காமல் இருக்கிறோம் என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம். செயல்பட ஆயத்தமாக உள்ள பாகத்திற்கு .. பகவான் மேன்மேலும் கைங்கர்யம் புரியும் வாய்ப்பை நல்குவார்.

 

தர்மம் செய்யும் எண்ணம் வந்து விட்டாலும் .. அதன் பலனை எதிர்பாராமல் பகவானைக் கைகாட்டி செய்யும் எண்ணம் வருவது அவ்வளவு எளிதல்ல. அதனால்தான் மற்ற ஆத்ம குணங்களை நன்கு வளர்த்துக்கொண்டால் .. அனைவரும் பகவானின் சரீரமே என்கிற எண்ணம் மனதில் நன்கு பதிந்து விடும். பின்னர் எந்த செயலையும் பகவானிடம் சமர்ப்பித்து செய்ய வேண்டும் என்னும் எண்ணமும் தானாக வந்து விடும் என்பதால்தான் ஆண்டாள் ‘பகவானிடம் கைகாட்டி செய்ய வேண்டியதை’ கடைசியாக அறிவுறுத்துகிறாள்.

 

அடுத்தபடியாக.. இத்தகைய ஆத்ம குணங்களை வளர்த்துக் கொள்வதின் மூலம் .. ‘உய்யும் ஆறு’ எனப்படும் அடையப் போகும் பெறும்பேற்றை எண்ணி ஆனந்தமாக .. இவ்வுலகத்திலும் நன்கு வாழ்ந்து பின்னர் அவ்வுலகத்தையும் அடைந்து அனுபவிக்கலாம் என்றுதான் ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று அழைத்து ‘உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோரெம்பாவாய்’ என்று முடிக்கிறாள்.

22.jpg

திருப்பாவை பாசுரம் 2.6

 

*உய்யும் ஆறு* எண்ணி உகந்தேலோரெம்பாவாய்

 

பகவத், பாகவத கைங்கர்யத்திலும், பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு வைகுந்தத்தை அடைய வேண்டும் என்பதிலும் உள்ள *ருசி* மற்றும் ‘நாராயணனே நமக்கே மோக்ஷமாகிய பெரும்பேற்றை அருளுவார்’ என்கிற *திட விசுவாசத்துடன்* .. ஆண்டாள் கோஷ்டியில் சேரந்தபின் .. ஆண்டாள் காட்டிய படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறி *ஆத்ம குணங்களை வளர்த்துக்கொண்ட பின்* .. அடையப் போகும் பெரும் பேற்றை எண்ணி உகந்தபடியே இவ்வுலகத்திலும் ஆனந்தமாக இருக்கலாம்.

 

எத்தகைய பெரும்பேற்றை நமக்கு அளிக்க பகவான் ஆசையுடன் காத்திருக்கிறார் .. அதையும் நம்மால் மிக சுலபமாக செய்யும் வகையில்  .. அதீத கருணையுடன் அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பது புரியும்போதுதான் நமக்கு ருசியும் விசுவாசமும் மேலும் வளரும். 

 

பரம பக்தர்கள் மற்றும் ஞானிகளான ஆழ்வார் ஆச்சார்யர்களுக்கு அளித்த அதே வைகுந்தத்தை ..  அவர்களுக்கு அருகில் கூட வர முடியாத நமக்கும் ... ‘ஆசைப்பட்டோம் .. நம்பிக்கை வைத்தோம் .. அபசாரங்களிலிருந்து விலகி ஆத்ம குணங்களை வளர்த்துக் கொண்டோம் .. ஆச்சார்ய பாகவத சம்பந்தம் உள்ளது’ என்பதையே ஒரு தகுதியாகக் கொண்டு அளிக்கிறார் என்றால் .. அதற்கு கைம்மாறாக நாம் என்ன செய்யப் போகிறோம்! பகவானுக்கு எவை எவை ஆனந்தத்தைக் கொடுக்கும் என்பதை அறிந்து இயன்ற வரையில் செய்ய வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். கீதையில் கண்ணன் ..  தன் பக்தன் எப்படியெல்லாம் இருப்பான் என்று ஆனந்தமாக அனுபவித்து சொன்னதில் .. நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்த்து செய்ய முயற்சிப்போம். 

 

मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।

कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।

 

பத்தாவது அத்தியாயத்தில், 'தன் பக்தர்கள், தன்னைப் பற்றி சிந்திப்பதிலும், தன்னைப் பற்றி.. தங்களுக்குள் உரையாடுவதிலும் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்' என்று கூறுகிறார்.

 

அக்காரவடிசலின் அறுஞ்சுவையை அனுபவிக்காத வரையில் சர்க்கரை சேர்த்த பால் அமிர்தமாகத் தோன்றலாம். பகவத் குணானுபவத்தை உண்மையாக அனுபவிக்க ஆரம்பிக்காத வரையில் சாமான்ய லோகானுபவங்கள் இன்பமாகத் தெரியும். ஒரு பக்தனுக்கு .. எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத .. ஆராஅமுதனின் உயர்ந்த அனுபவத்தை சுவைக்கும் வாய்ப்பு கிட்டியபின் சாமான்ய அனுபவங்களில் மனம் ஈடுபடாது. அதே அனுபவத்திலிருக்கும் மற்ற பக்தர்களுடன் பகவத் விஷயத்தை பகிர்ந்து கொள்வதே பரமானந்தமாக இருக்கும்.

 

பகவான் விரும்புவதெல்லாம் .. அவரை நினைத்தால் உருகும் மனதைத்தான். விதுரர் தன் குடிலுக்கு கிருஷ்ணர் வந்தவுடன் .. ஆனந்தத்தில் செய்வதறியாது வாழைப்பழத்தை விடுத்து தோலை தந்தபோது ஆனந்தமாக உண்ட கிருஷ்ணர் .. விதுரரின் மனைவி எடுத்துச் சொன்னதும் தோலை விடுத்து பழத்தைக் கொடுத்தபோது 'பசியாறி விட்டது' என்றார்.

 

பகவதனுபவத்தில் உருகி அவன் குணானுபவத்தின் விசேஷத்தை அறிய முடியாமல் மனம் குழம்பினால் லோக லிஷயங்களில் குழம்பாமல் மனம் தெளிவடையும். மாறாக பகவத் விஷயத்தில் சிறிதும் சலனமின்றி .. அவன் விஷயத்திற்கு மனம் உருகவில்லையென்றால் .. லோக மாயையில் சிக்கி மனம் குழம்பி விடும்.     

 

எப்பேர்பட்டவர் நமக்காக இரங்கி வந்து எவ்வளவு லீலைகள் புரிந்துள்ளார் என்று கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து மனம் உருகி கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் .. பின்னர் லோக விஷயங்கள் எதற்காகவும் அழ வேண்டிய தேவை இருக்காது. 

 

அடுத்த ஸ்லோகத்தில், ‘எனக்கு அன்புடன் தொண்டு செய்வதில் இடையறாது ஈடுபட்டுள்ள இத்தகைய பக்வதர்களுக்கு, என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்’ என்று அருளியிருக்கிறார். 

 

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम्।

 

ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते।।10.10।।

 

காரண ஞானம் வந்து விட்டால் காரிய ஞானம் எளிதில் புரிபட்டுவிடும். அதேபோல், அனைத்திற்கும் காரணமான பகவானைப் பற்றிய ஞானம் வந்து விட்டால் கார்ய ஞானம் .. கர்ம பலன்களைப் பற்றிய ஞானம் அனைத்தையும் பகவான் நமக்கு உணர்த்தி தெளிவை உண்டாக்குவார்.

 

அதனால்தான், ஆண்டாள் .. ஆத்ம குணங்கள் வளர்ந்த பின் அடுத்தபடியாக .. லோகவிஷய கவலைகளின்றி .. அடையப்போகும் பெரும்பேற்றை எண்ணி உகந்து இருப்போம் என்று அனைவரும் சேர்ந்து ஆனந்தமாக இருக்க அழைக்கிறாள்.

காரண ஞானத்தின் மூலம் சிறிது கார்ய ஞானத்தை அறிந்து .. அக்காரவடிசலின் சுவையையும் சிறிது அனுபவிப்போம் 

திருப்பாவை பாசுரம் 2.7

 

வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து இரவு கண் விழித்திருக்கும் பொழுது பரமபத ஸோபானம் (உயர்ந்த இடத்தை அடைய படிக்கட்டுகள்) என்ற ஒரு விளையாட்டை விளையாடுவார்கள். முதலில் தாயம் என்ற ஒற்றைப்புள்ளி சொக்கட்டானில் விழுந்தவர்களே இந்த விளையாட்டில் அனுமதி பெறுவார்கள். 

 

அந்த ஒன்று என்பது விவேக ஞானமாகிய ஆத்மபரமாத்ம ஞானம் என்று எடுத்துக் கொள்ளலாம்;

 

('ஏக விஞ்ஞானேன பஹுவிஞ்ஞானம்' என்று சொல்வார்கள்.

 

_காரண ஞானம்_ தெரிந்து விட்டால் _கார்ய ஞானமும்_ தெரிந்து விடும்.

அனைத்திற்கும் காரணமான  _பரமாத்மாவைப் பற்றிய ஞானம்_ ஒன்றைத் தெரிந்து கொண்டால் .. காரிய ஞானமனைத்தும் கைகூடும்)

 

அல்லது பகவான் யார் மூலமாவது நமக்கு நல்லது செய்ய வரும்போது (அஞ்ஞானத்தை விலக்கி ஆத்ம ஞானத்தை எடுத்துச் சொல்ல முயலும்போது) அதை ‘விலக்காமை’ என்கிற குறைந்தபட்ச நல்ல குணம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

 

'விலக்காமை' என்கிற ஓர் குணத்தைப் பற்றியபின் பகவானால் நமக்கு ஆத்ம ஞானத்தை யார் மூலமாகவோ படிப்படியாக உணர வைக்க முடிகிறது .. இந்த உலகத்தின் நிலை நமக்கு புரிய வருகின்றது.. பிறகு மாயை என்ற தீய குணங்களுடைய நச்சு பாம்புகளும்..பகவான் கொடுக்கும் உயர்ந்த வழி என்ற ஏணிப்படிகளும் ..ஆன்மாவின் பல்வேறு நிலைகள் என்ற பல்வேறு கால கட்டங்களும் அந்த கட்டத்தில் அடங்கும்.. .இதெல்லாம் கடந்துவிட்டவர்கள் மேலே சென்று விஷ்ணு லோகம் வரைக்கும் சென்றடைந்தால் விளையாட்டு நிறைவு. 

 

நாம் ஆண்டாள் கூறியபடி ஆத்ம குணங்களை வளர்த்துக் கொண்டால் .. பரமபதத்தை (பரமமான விஷ்ணு பதத்தை) அடையும் மார்கத்தில் முன்னேறும்போது .. 

 

_அஹங்காரம்_ (தன்னைப்பற்றிய உயர்ந்த அபிமானம்), _மமகாரம்_ (தன்னுடைய முயற்சி .. அதனால் பலன் தன்னுடையது, தன் சொத்து என்னும் எண்ணம்), _ஆசை_ (பெயர், புகழ் மற்றும் தற்காலிகமான லோக விஷயங்களுக்காக ஆசைப்படுதல்), _கோபம்_ (ஆசை நிறைவேறாதபோது பிறக்கும் கோபம்), _வெறுப்பு, பகைமை_ (ஆசை நிறைவேறாததற்கு காரணம் என்று நினைப்பவர்கள் மேல் ஏற்படும் வெறுப்பு), _பாகவத அபசாரம்_ (பக்தர்களின் பிரபாவம் அறியாமல் அவர்கள் மனம் வருந்தும்படி நடந்து அதனால் பகவானின் கோபத்துக்கு ஆளாதல்) முதலான பாம்புகளின் வாயில் அகப்படாமல் தப்பி விடலாம்.

 

அடையப்போகும் உயர்ந்த விஷயத்தில் இருக்கும் ஈடுபாடு மற்றும் நமக்கு இருக்கும் சக்தியைப் பொறுத்து கீழ்க்கண்ட ஏணிகளில் ஏறும் வாய்ப்பும் கிட்டும்.

 

ஆச்சார்யர்கள் மற்றும் அறிந்தவர்களிடம் கேட்டு _ஞானத்தை வளர்த்துக் கொள்தல்_, அதனால் _ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதில் ஏற்படும் ஆர்வம்_,  _பகவத் விஷயங்களைக் கேட்பதில் ஏற்படும் ஆர்வம்_, பகவத் குணங்களைப் பற்றி நிறைய கேட்டு அதனால் _பகவானிடத்தில் ஏற்படும் அதீத பக்தி_,  அந்த பக்தியே காதலாக மாறி _பகவானைத் தவிர்த்த மற்ற விஷயங்களில் ஈடுபாடின்மை_ 

 

போன்ற ஏணிகளில் ஏற முடிந்தால் இலக்கை நோக்கி விரைவில் முன்னேறலாம்.

 

ஆனால், ஆத்ம குணங்களை முழுமையாக வளர்த்துக் கொள்ளாவிட்டால் .. சில ஏணிகளில் ஏற முடிந்தாலும் .. அஹங்கார, மமகாரம் முதலான பாம்புகளின் வாயில் அகப்படும் ஆபத்திலிருந்து தப்ப முடியாது.

 

அதனால்தான், ஆத்ம குணங்களையுடைய  ஒரு பாகவதனைப் பற்றிக்கொண்டால், நம்மை ஆபத்தின்றி பாதுகாப்பாக வழிநடத்திச் செல்வார். பகவான் அவரைக் கொண்டு ஏணிகளையும் காட்டிக் கொடுப்பார். ஆர்வமும், சக்தியும் இருந்தால் ஏணிகளில் ஏறி விரைவில் இலக்கை நோக்கி முன்னேறலாம். இயலாவிட்டாலும் பாம்புகளின் பிடியில் அகப்படாமல் மெதுவாக முன்னேறலாம். 

 

திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம் - 49 பாசுரத்தில் கீழ்க்கண்டவாறு ஶ்ரீரங்கத்தை வர்ணிக்கிறார்.

 

"நண்டை உண்டு நாரை பேர வாளை பாய - நீலமே

அண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தணீர் அரங்கமே!"

 

'நண்டை உண்ட நாரை மெதுவாக நகர .. நாரை தன்னையும் உண்டு விடுமோ என்று  வாளை மீன் பயந்து ஓட, நாரை மற்றும் வாளையிடமிருந்து விலகி கருநீலமலர்களின் அடியில் பயமின்றி கெண்டை மீன்கள் மேயும் நீர்நிலைகள் உடைய ஶ்ரீரங்கம்' என்று வர்ணிக்கிறார்.

 

ஆழ்வார்கள் பாசுரங்களில் மேலோட்டமாக இயற்கையை வர்ணிப்பது போல் தோன்றினாலும், உள்ளுறைப்பொருளாக ஸ்வோபதேசமாக (स्व उपदेशः) மிக உயர்ந்த அர்த்தங்களை அருளியிருப்பார்கள். அவற்றை ஆச்சார்யர்களின் வியாக்கியானங்களின் மூலம் அறியலாம்.

 

*நண்டை உண்டு நாரை பேர, வாளை பாய, நீலமே (நீலோத்பல புஷ்பம்) அண்டை கொண்டு கெண்டை மேய*

 

அஹங்காரமெனும் நாரை, _உலகானுபவத்திலிருப்பவரை_ (நண்டு) சுலபமாக சாப்பிட்டு விடும்;

வாளை - _உபாஸகன்_..உலகானுபவத்திலிருந்து விலகியவர்.. ஆனால்  ஸ்வப்ரயத்னத்தால் அடைவதாக நினைப்பவர் .. அஹங்காரத்துக்கு வசப்படலாம்;

_நீலவண்ண பெருமானின் சரணாகதன்_ - 'உன் சொத்தான அடியேனை, உன் திருப்திக்காக உன் முயற்சியால் சேர்த்துக்கொள்ளப் போகிறாய்' என்றிருப்பவரை அஹங்காரம் அண்டாது.

 

'நான்' என்று சொன்னாலே அஹங்காரம் வந்து விடலாம் என்பதால்தான், சரணாகதர்கள் .. 'பகவான் மற்றும் பக்தர்களுக்கு அடியவன்' என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள 'அடியேன்' என்றே தன்னைக் குறிப்பிடுவார்கள்.

 

நாமும் நீலவண்ண பெருமானிடம் சரணடைந்து ..  ஆண்டாள் கூறிய ஆத்ம குணங்களை வளர்த்துக் கொள்வோம்.

paramabatham.jpg

திருப்பாவை பாசுரம் 2.8

 

ஆழ்வார் ஆச்சார்யர்களைப் பற்றி நாம் நிறைய அறியும்போதுதான் .. அவர்கள் எத்தனைக்கெத்தனை அரிய செயல்களைச் செய்தார்களோ .. அத்தனைக்கத்தனை அஹங்கார மமகாரம் தங்களை சிறிதும் அண்டாமலிருந்தார்கள் என்பது புரிபடும். அப்பொழுதுதான் நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் அஹங்காரம், மமகாரம் கொள்வதற்கு எவ்வித வாய்ப்புமில்லை என்பதும் தெளிவுற மனதில் பதியும்.

 

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற பெருமை வாய்ந்த 'திருமாலை' பிரபந்தம் அருளிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரோ,  இறுதியில்

 

கண்ணனை அரங்க மாலை,*

துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*

இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!

 

என்று தன் பாடலை 'புன்கவி' என்றும் .. ஆயினும் தொண்டருக்கு அடியவரானதால் தன் கவிதை எம்பிரானுக்கு இனிமையாக இருக்கும் என்று தன் விசுவாசத்தையும் தெரிவிக்கிறார்.

 

இராமானுஜரால் திருத்திப் பணிகொள்ளப்பட்ட _திருவரங்கத்து அமுதனார்_ .. இராமானுஜரின் பெருமையைப் பேசும் நூறு பாசுரங்களை எழுதி அவரிடம் காண்பித்தபோது .. பகவானின் பெருமையை விடுத்து தன் பெருமையைப் பாடும் ஒரு பிரபந்தம் இருக்கக்கூடாது என்று நதியில் சேர்த்து விட்டார்.

 

பின்னர், இராமானுஜரின் பெருமையை எப்படியாவது அனைவருக்கும் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்று விரும்பியவர் .. ஒவ்வொரு பாசுரத்திலும் ஆழ்வார் ஆச்சார்யர்களின் பிரபாவங்களைக் கூறி அப்படிப்பட்டவர்களின் அடி பணிந்து உய்ந்த இராமனுஜனின் அடி போற்றுவோம் - 

 

பூமன்னு மாது பொருந்திய மார்பன்*  புகழ் மலிந்த- 

பாமன்னு மாறன்*  அடிபணிந்து உய்ந்தவன்*  பல் கலையோர்- 

தாம்மன்ன வந்த இராமானுசன்*  சரணாரவிந்தம்- 

நாம்மன்னி வாழ*  நெஞ்சே!  சொல்லுவோம் அவன் நாமங்களே

 

என்று பாட ஆரம்பித்து

 

108 பாசுரங்கள் இயற்றியருளினார்.

 

பரம்பொருளான திருமாலைப் போற்றி ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்களோடு, ராமானுச முனியைப் பாடும் ராமானுச நூற்றந்தாதியும் நாலாயிரத்தில் ஒரு பிரபந்தமாக சேர்த்துக் கொண்டாடப்படுகிறது - 108 இராமானுஜ நாமம் கொண்டதால்_பிரபன்ன காயத்ரி_ என்று போற்றப்பட்டு ..  பிரபன்னர்களால் (சரணாகதர்களால்) தினமும் ஓதப்படுகிறது. 

 

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இராமானுஜ நூற்றந்தாதியை எழுதிய திருவரங்கத்து அமுதனாரோ

 

தமக்குப் பரமப்ராப்யமான இராமானுஜரின் திருவடிகளை வருணிக்கும்போது

 

'உதிப்பன உத்தமர் சிந்தையுள்*  ஒன்னலர் நெஞ்சம்அஞ்சி- 

கொதித்திட*  மாறி நடப்பன*  கொள்ளைவன் குற்றம்எல்லாம்-

பதித்த என் புன்கவிப் பாஇனம் பூண்டன பாவுதொல்சீர்* 

எதித்தலை நாதன்*  இராமானுசன் தன் இணைஅடியே'  

 

மிகவும் உயர்ந்தவர்களின் நெஞ்சங்களில் இந்தத் திருவடிகள் எப்போதும் நீங்காமல் உள்ளன. வேதவேதாந்தங்களைக் குறித்து எதிர்வாதம் செய்பவர்கள் அச்சம் கொள்ளும்விதமாக இவரது திருவடிகள் கம்பீரமாக நடக்கின்றன. அனைத்து வகையான குற்றங்கள் உள்ள என் போன்ற நீசனின் மூலம் வெளிப்பட்டதும், கவிதை கூறும் திறன் அற்ற என் போன்றவன் மூலம் வெளிப்பட்டதும் ஆகிய இந்தப் பாசுரங்களை – “இவை குற்றம் நிறைந்த பாசுரங்கள்”, என்று ஒதுக்காமல், மாலையாக எண்ணி, தன் மீது எம்பெருமானாரின் திருவடிகள் சூடிக்கொண்டன' என்கிறார்.

 

ஶ்ரீரங்கநாதனே .. ஶ்ரீமணவாளமாமுனிகள் காலக்ஷேபத்தில் ஒரு சிறுவனாக எழுந்தருளி .. இவரே தன்னுடைய  ஆச்சார்யர் என்று சொல்லி ..  'ஶ்ரீசைலேச' தனியனும் .. தன் ஆதிசேஷ வாஹனத்தையே குருதக்ஷிணையாகவும் சமர்ப்பித்தார். அரங்கனின் ஆச்சார்யர் என்று  பெருமை வாய்ந்த ஸ்வாமி இராமானுஜரின் மறு அவதாரமானவர் ஶ்ரீ மணவாளமாமுனிகள். 

 

அப்படிப்பட்டவர் ஆழ்வார் ஆச்சார்ய பிரபாவத்தைப் பாடும் உபதேசரத்னமாலை எனும் பிரபந்தத்தை 'தன் ஆச்சார்யன் தனக்கு செய்த உபதேசத்தையே எழுதுகிறேன்' என்று தொடங்குகிறார்.

 

இராமானுஜர் காலத்திற்குப் பின் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக அவதரித்தவர் ஶ்ரீவேதாந்த தேசிகாச்சார்யார். திருவஹீந்திபுரத்தில் கருடனால் ஹயக்ரீவ மந்திரோபதேசம் பெற்று .. அதனை ஜபித்து .. ஶ்ரீ ஹயக்ரீவரே பிரத்யக்ஷமாக .. அவரால் ஞானம் அருளப் பெற்றவர். 

 

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் 124 நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.  அப்படிப்பட்டவர் .. மக்களை உய்விக்கும் .. 'ஶ்ரீபரமபத ஸோபானம்' என்னும் நூலை எழுதும்போது தொடக்கத்திலேயே .. 'இவ்வழி பகவானாலேயே காட்டப்பட்டு .. அவராலேயே எழுதப்பட்டது' என்று தன் நன்றியைத் தெரிவிக்கிறார்.

 

 

பகவனானின் பிரீதிக்கு பாத்தியப்பட்ட ஆச்சார்யர்களோ .. பகவதருளால் அஸாத்திய செயல்களையும் செய்யும் வல்லமை படைத்தவர்களானாலும் .. அவற்றை தன் சிஷ்யர்களுக்கு பிரதானமாகக் காட்ட மாட்டார்கள். ஏனெனில் தன் சிஷ்யர்கள் பகவானின் குணங்களுக்கு ஆட்படுவதையே விரும்புபவர்கள் .. சாகசச் செயல்களைக் கண்டு மயங்கி விடக்கூடாது என்பதில் கவனத்துடன் இருப்பார்கள்.

 

எங்கேயோ இருந்து கொண்டு .. பகவானின் தேர்ச்சீலையில் நெருப்பு பிடித்தது என்று பகவதருளால் அறிந்து .. தன் துண்டை கைகளால் கசக்கி .. அங்கு நெருப்பை அணைத்த ஆச்சார்யரும் உண்டு. 

 

வெள்ளம் ஏற்பட்டு கோவில் மூழ்கும் நிலையில் பகவானிடம் பிரார்த்தித்து .. ஒரு கைதட்டலின் மூலம் கோவில் பின்சுவர் இடிந்து வெள்ளநீரை வடிய வைத்த ஆச்சார்யரும் உண்டு. 

 

தன் ஞானம், அனுஷ்டானம் முக்கியமாக சரணாகதி பாவத்தால் அவர்களால் எதுவும் சாதிக்க முடியும் என்றாலும் .. அவற்றை பிரதானமாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். 

ramanujacarya.jpg

ஸ்வதந்திரரான பகவானை நேரே பற்றினால் .. அடியவன் என்னும் பாரதந்திரயம் நமக்கு எளிதில் புரியாது. பாரதந்திரர்களான ஆச்சார்யர்களைப் பற்றினால்தான் நமக்கு பாரதந்திரயத்தை நன்கு புரிய வைப்பார்கள். அதனால்தான் .. பகவான் முக்கியமாகக் கலியுகத்தில் பாரம்பர்ய ஆச்சார்யர்கள் மூலமாகவே தன்னை அடைய முடியும் என்று நியமித்திருக்கிறார்.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்

bottom of page