
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 3.1
ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை எத்தனை அழகாக ஆண்டாள் திருப்பாவையின் பாசுரங்களில் செதுக்கி இருக்கிறாள் என்பது இந்த பாசுரங்களின் அமைப்பை பார்த்தால் விளங்கும்.
இந்த சிந்தாந்தம், கர்ம ஞான பக்தி யோகங்களை மோக்ஷ சாதனமாக சொல்லவில்லை. சரணாகதியையே மோக்ஷ சாதனமாக சொல்கிறது. இதையே முதல் பாசுரத்தில், நாராயாணன் என்று பரமபத நாதனை சொன்னாள். இரண்டாவது பாசுரத்தில், பாற்கடலில் பையதுயின்ற பரமன் என்று வியூஹ மூர்த்தியை சொன்னாள். இந்த பாடலில், ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ அவதார மூர்த்தியை சொல்கிறாள்!
பார்ப்போம்

மேலும் திருவிக்ரமாவதாரத்தை சொன்னதற்கு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்த அவதாரம் கருணையின் வடிவம். இந்த அவதாரத்தில் மஹாபலி சக்ரவர்த்தி – அசுரனான போதும், அவன் தேவர்களை வருத்திய போதும் அவனை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம். இந்த அவதாரத்தில்தான், நல்லவன்- தீயவன், ஆஸ்திகன் – நாஸ்திகன் என்று எந்த வித பாரபட்சமுமில்லாமல் எல்லோர் தலையிலும் தன் பாத ஸ்பர்சம் வைத்த அவதாரம். அதனால் சர்வ வ்யாபகத்வம், சர்வக்ஞத்வம் தோன்ற ஓங்கி உலகளந்த உத்தமன் – புருஷோத்தமன் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.
மழை அதிகம் பெய்தாலும் .. பெய்யாமல் விட்டாலும் தீங்கு விளையும். இந்த புருஷோத்தமனின் நாமத்தை சொல்லி நீராடி பாவை நோன்பிருந்தால் தீங்கில்லாமல் மாதம் மும்மாரி பொழியும் என்று வாழ்த்துகிறாள். அந்த திருவிக்கிரமனின் பாதத்தை நோக்கி ஓங்கி வளர்ந்தது போல் நெற்பயிர்கள் வயல் வெளியெங்கும் நிறையும். அந்த வயல் வெளிகளில் ஊடே ஓடும் ஓடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். குவளை மலர்களின் துளிரில் வண்டுகள் தூங்கும் என்று இயற்கை அழகையும் செழிப்பையும் வர்ணிக்கிறாள்.

ஆசார்யர்களை அண்டிய சிஷ்யர்கள், துள்ளும் கயல்களைப்போலே அந்த ஞானம் தந்த இன்பத்தினால் களிப்பர். தன் விருப்பத்தை நிறைவேற்றும் ஆச்சார்யர்கள் மிகுந்து .. ஞானம் தழைத்திருப்பதால் குவளைப்போதில் துயின்ற வண்டைப்போல், பாகவதர்களின் ஹ்ருதய கமலத்தில் அந்த பரமன் உறங்குகிறான்.
ஆண்டாள் கூறியபடி கைங்கர்யத்தில் ருசியுடனும், பகவானிடத்தில் விசுவாசத்துடனும், ஆத்ம குணங்களை வளர்த்துக் கொண்டதனால் பகவத் விஷயத்தில் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்த ஜீவனைப் பார்த்த பகவான் பேரானந்தம் கொள்கிறார். பல ஜன்மங்களாக .. ஆத்ம உஜ்ஜீவனமடைய செய்து வந்த முயற்சி .. இந்த ஜீவனிடத்தில் பலனளித்து விட்டது .. க்ருஷி பலித்து ஜீவன் கனிந்து விட்டது என்று உளமகிழ்ந்து அந்த பக்தனின் ஹிருதயத்தாமரையின் நடுவில் சிறிய இடத்தில் ஆனந்தமாக யோகநித்ரை கொள்கிறார்.
அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. அவைகளின் மடி பெருத்து இருப்பதால் ஒரு கையால் பாலைக்கறக்க இயலாது.. முலை ‘பற்றி’ என்று இருகைகளாலும் பசுக்களின் மடியை பற்றித்தான் பாலை கறக்க முடியும்… இதற்கும் தேங்காதே என்று தயங்காமல் புகுந்து பாலை கறக்க சித்தமாக ஆய்பாடி இடையர்கள் இருப்பார்களாம்.

இங்கே பசுக்கள் ஒரு உருவகம். அந்த பகவானின் உருவகம். வள்ளன்மை அவன் குணம். அவன் எவ்வளவு கொடுத்தாலும் குறைவில்லாத வள்ளல். அத்துடன் பாலை கன்று குட்டிகளும், இடையர்களும் கொள்ளாவிடில் பசு எப்படி தவியாய் தவிக்குமோ அதுபோல் பரமனும் .. ஜீவாத்மாக்கள் அவனை கொள்ளாவிடில் தவித்து போகிறான். ஜீவாத்மாக்கள் முக்தி பெற்று அவனை எவ்விதம் அனுபவிப்பார்களோ .. அதைவிட அதிகமான அளவில் முக்தாத்மாக்களை அனுபவிக்க பகவான் காத்திருக்கிறான்.

பசுத்தோல் போத்திய வைக்கோல் கன்றுக்கும் பசு பால் சுரக்குமாப்போலே .. பக்தியில் தோய்ந்த ஆழ்வார் பாசுரங்களை .. நாம் பாடினால் .. அந்த ஆழ்வாரை நினைத்து அகமகிழ்ந்து பகவான் நமக்கும் அருள்பாலிப்பார்.
பகவானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பகவானை பல, பல பாவனையில் அனுபவித்து பாடியிருக்கிறார்கள். பகவானை ஒரு குழந்தையாய், காதலனாய், நண்பனாய், ஸ்வாமியாய் அவர்கள் பாடியதை நாம் உணர்ந்து பாடினாலே .. நம் மனம் சிறிது சிறிதாக நெகிழ ஆரம்பிக்கும். விளக்கு வெளிச்சம் வந்த பின் இருட்டு விலகுமாப்போலே .. பக்தி நிறைந்திருக்கும் மனதில் குழப்பம் இராது.

உலகச் செல்வங்களனைத்தும் ஓர் நாள் நீங்கக்கூடிய செல்வமே.
_என்றென்றும் *நீங்காத செல்வம்* பகவத் பாகவத கைங்கர்யமாகிய செல்வம்_.
ஒருமுறை திருவரங்கம் கோயிலுக்கு மதில் சுவர் கட்டும்போது .. வழியில் ஆழ்வார் நந்தவனம் வர அதை அகற்ற முயன்றனர். அப்பொழுது ஆச்சார்யர்கள் .. ‘அரங்கனுக்கு காவல் .. கற்களால் கட்டப்பட்ட மதிள் அல்ல. ஆழ்வார் பாசுரங்களே .. என்றென்றும் அரங்கனைக் காக்கும் மதிளாகும்‘ என்றுரைத்து நந்தவனத்தைச் சுற்றி மதிளமைக்கச் சொன்னார்களாம்.
அதேபோல் நாம் சேர்த்து வைக்கும் பொருட்செல்வத்தை விட .. நாம் பகவத், பாகவத கைங்கர்யத்தில் ஈடுபடுவதும் .. நம் சந்ததியினரையும் .. ஈடுபாட்டுடன் இத்தகைய கைங்கர்யங்களில் பங்கு பெற வைப்பதுமே .. நம் சந்ததிக்கு நாம் சேர்த்து வைக்கும் நீங்காத செல்வமாகும்.

ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்