top of page

முதல் பாசுரம்

 

 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; 
 நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! 
 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! 
 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், 
 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் 
 நாராயணனே, நமக்கே பறைதருவான், 
 பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை பாசுரம் 1.1

 

ஆண்டாள், மார்கஷீர்ஷம் எனப்படும் மார்கழி மாதத்தில், பௌர்ணமி தினமான நல்ல நாளிலே, கண்ணனை அடைய நோன்பிருக்கலாம் என்று அனைவரையும் அழைக்கிறாள். ஷீர்ஷம் என்றால் தலைப்பு. மார்கஷீர்ஷம் என்றால், மாதங்களுக்குள் தலையான மார்கத்தைக் காட்டக்கூடிய மாதம் எனப்படும். 

 

உத்தராயணம் என்றால், தேவர்களுக்கு ஒரு பகல் பொழுது. தை தொடங்கி ஆனி மாதம் வரை. 

தக்ஷிணாயினம் என்றால், தேவர்களுக்கு ஒரு இரவு பொழுது. ஆடி தொடங்கி மார்கழி மாதம் வரை.

 

பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற்காலை பொழுது. ஸத்வ குணம் ஓங்கியிருக்கும் நேரம். மாலை, இரவு வேளைகளில், ரஜோ குணமும், தமோ குணமும் அதிகமாக இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும், துவக்கப்படும் செயல்களின் கார்யம் ஸித்தியாகும். முக்கியமாக, பெருமாளை அடையச் செய்யப்படும் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். தேவர்களின் காலைப்பொழுது தை மாதம் எனும்போது, அதற்கு முந்தைய மாதமான மார்கழிதான், தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமாகும். ஆகையால், மார்கழி மாதம், ஸத்விஷயங்களுக்கு மிகவும் ஏற்ற மாதமாகும்.

 

மார்கழி மாத விடியல் நேரம் என்பது தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஒன்று சேர பிரம்ம முகூர்த்த வேளை என்பதால், பகவானை அடையும் மார்கத்தில்,   இத்தகைய உன்னதமான வேளையில், பயணிக்க ஆரம்பிக்கலாம் என்று அனைவரையும் அழைக்கிறாள்.

 

8569287e63ed124c51ab7eead0e88461.jpg

 

சரம ஸ்லோகம்

 

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச

 

‘நான் இதற்கு முன் சொன்ன எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு, (நாராயணனாகிய) என்னையே எல்லா தர்மங்களாகப் பற்று. ஸர்வ வல்லமை பொருந்திய நான், எதுவுமில்லாத உன்னை, எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். சோகப்படாதே’ என்று கிருஷ்ணர் கீதையில், அருளியிருக்கிறார். தர்மத்தை விட வேண்டுமென்றால், ‘தர்மத்திலிருக்கும் உபாய புத்தியை விட்டு விடு. நானே உன் பாவத்தை நீக்கி மோக்ஷம் தருவேன். வேறு உபாயம் தேவையில்லை. இந்த தர்மத்தைச் செய்வதன் மூலம் ஒன்றை அடையப்போகிறோம் என்றில்லாமல், என் ப்ரீத்திக்காக மட்டுமே தர்மம் செய்’, என்று சொல்கிறார். 

 

இந்த ஸ்லோகத்தில், பிரபன்னன் செய்வதற்கு இரண்டு வினைச் சொற்கள் உள்ளன.  சரணடைந்து பற்றுதல். 

பெருமாள் செய்வதற்கு - பாவங்களிலிருந்து விடுவித்து மோக்ஷமளிக்கும் - ஒரு வினைச்சொல் உள்ளது.

 

“மார்கழி திங்கள்” பாசுரத்திலும், சரணாகதன் செய்வதற்கு இரண்டு வினைச் சொற்களும்,

போதுமினோ, நீராடுமினோ - ஒரு வினைச்சொல் 

(யமுனையில்) படிந்து - வந்து படிதல் இரண்டாவது வினைச்சொல்.

சரண்யனான பகவான் செய்வதற்கு, ‘பறை தருவான்’என்ற ஒரு வினைச்சொல்லும் உள்ளன.

 

இந்த பாட்டில், சரணாகதர்கள், “சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காளாவர்”.

சரண்யனோ, “கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், 
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் 
நாராயணன்”. சரண்யனான நாராயணன், சரணாகதர்களுக்கு “பறை தருவான்”. 

பறை என்பது புருஷார்த்தம் என்கிற கைங்கர்யம்.

 

Thiruppavai-First-Pasuram-Vedicfolks.jpg

திருப்பாவை பாசுரம் 1.2

 

நாராயணனே, நமக்கே பறைதருவான்”, என்பதன் மூலம், சரணாகதி தத்துவமான, ரஹஸ்யார்த்தத்தையே, ஏற்றுக்கொண்ட இடைப்பெண் பாவத்திற்கு தகுந்தாற்போல், வெளியிடுகிறாள். இதில், ‘நாராயணனே’, ‘நமக்கே’ என்னும் வார்த்தைகளிலுள்ள ‘ஏவ’காரத்தின் மூலம்  ஸூக்ஷ்மார்த்தத்தை வெளியிடுகிறாள்.


நாராயணனே பறை -ப்ராப்யம் (அடைய வேண்டியது).    

நாராயணனே பறை தருவான்- உபாயம் (அடையும் வழி)

நமக்கே பறை 

நமக்கே  பறை தருவான்

 

‘நாராயணனே’ எனும் பதத்தினால், அடைய வேண்டிய புருஷார்த்தமும் நாராயணனே!  அந்த பறையைப் பெற (அடைய வேண்டிய புருஷார்த்தம்), உதவும், உபாயமாகவும் நாராயணனே இருப்பான் என்கிறாள்.

 

‘நமக்கே’ எனும் பதத்தின் மூலம் அதிகாரி ஸ்வரூபம் சொல்லப்படுகிறது.

அதிகாரம் என்பது, சரணாகதி செய்பவருக்குத் தேவையான தகுதியைக் குறிக்கிறது. 

சரணாகதி செய்பவருக்கு, சரணாகதியிலும், அதன் பின்னர் செய்யப் போகும் கைங்கர்யத்திலும், ஒரு ருசி, ஈடுபாடு வேண்டும். பகவான் மேல் ஒரு திட நம்பிக்கை வேண்டும். பேறு தப்பாது என்று துணிவிருக்கை வேண்டும்.

மனித முயற்சியும் இறை அருளும் சேர்ந்தால் கார்யஸித்தி ஆகும்.

 

சரணாகதன் (நாம்), சரண்யனிடம் (பெருமானிடம்) செய்வது சரணாகதி (வேறு புகல் இல்லை. உன் திருவடியே சரணம் என்று பற்றுதல்)

 

அடைய வேண்டிய இலக்கின் பெருமை புரிந்தால்தான், ஈடுபாட்டுடன் அதை அடைய வேண்டிய முயற்சியை மேற்கொள்வோம் என்பதால், ஆண்டாள் முதல் பாசுரத்திலேயே பிறவிச் சுழலிலிருந்து விடுபட வைக்கும்  பெரும்பேறான மோக்ஷம் அடைவதைப் பற்றியும், அதை யார் தருவார், யாருக்கு தருவார் என்பதைத் தெளிவுறக் கூறுகிறாள்.

வைகுண்டம்

 

விகுண்ட - குறைவேயில்லாத ஊர்.  (குண்ட - குறைந்த)

ஆத்மாவிற்கு இருக்கிற ஞானத்திற்கும் ஆனந்தத்திற்கும் குறைவே இல்லாத ஊர். மலர்ந்த ஞானத்துடன் ஆனந்தத்துடன் இருக்கும் ஊர். பூலோகத்தில் நம்முடைய கர்மங்கள் நம்மை (ஆத்மா - புத்தி, இந்திரியங்கள், மனசு ஆகியவற்றை) மூடிக்கொள்கின்றன.புத்தியை மழுங்கடித்து மனதை பேதலிக்க வைக்கும்.

 

ஒவ்வொரு ஜீவனும் ஆசைப்பட வேண்டிய பெரிய பேறு, பிறவிச்சுழலிலிருந்து  நம்மை விடுவிக்கும் முக்தி. 

 முக்தியடைந்த ஒரு ஜீவன் இந்த லோகத்திலிருந்து  அர்ச்சிராதி மார்கத்தில் நீண்ட பிரயாணம் செய்து விரஜா நதியைத் தாண்டி அக்கரைக்கு வைகுந்தத்துக்குப் போகிறார். இத்தகைய முக்தன் எப்படி போகிறான் என்பதை, முக்தியை நோக்கிக் போகிற ஜீவாத்மாவாக, பெருமாள் தானே, பூலோக வைகுண்டமான ஶ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி அன்று நடத்திக் காட்டுகிறார்.

 

சரணாகதனின் தகுதியான, ருசி மற்றும் விசுவாஸத்தை, 

நீராடப் போதுவீர் (ருசி), படிந்து (விசுவாசம்) என்று, இடைப்பெண் பாவனையுடன் எடுத்துரைக்கிறாள்.

 

கைங்கர்யத்தில் ருசி மற்றும் விசுவாஸமாகிய செல்வம் உடையவர்கள் என்பதால், ‘செல்வச் சிறுமீர்காள்’ என்றழைத்தாள்.

 

லோக விஷயானுபவத்தை விட்டு, கைங்கர்யத்தில் ருசி இருக்க வேண்டும்.

 

வ்யதிரேக முகமாக, எதை விட வேண்டும் (விடுகை) என்பதையும், அன்வய முகமாக, எதைப் பற்ற வேண்டும் (பற்றுகை) என்பதோடு சேர்த்துச் சொன்னால்தான், தெளிவு பிறக்கும் என்பதால், ‘நமக்கே’ பதத்தின் மூலம், இவ்விரண்டையும் உணர்த்துகிறாள்.

 

இதில் ‘நாம்’ என்பது “அவரே புருஷார்த்தம், அவரே உபாயம்” (பற்றுகை) என்ற உறுதி இருப்பவர்களாகிய நாம் என்று கொள்ள வேண்டும். “அவரைத் தவிர வேறு பயனில்லை (விடுகை) என்று புரிந்து கொண்டவர்களுக்கு, அவரே பிரயோஜனம் என்றிருப்பவர்களுக்கு மட்டுமே மோக்ஷம் கொடுப்பார்” எனும் ஸூக்ஷ்மார்த்தத்தையும் வெளியிடுகிறாள்.

 

அவரைத் தவிர வேறு பிரயோஜனாந்திரத்தைத் துறந்து, உபாயாந்திரத்தைத் துறந்து, பிரயோஜனமும் அவரே, உபாயமும் அவரே என்று ஐயமின்றி புரிந்து கொண்டவர்களாகிய நமக்கே, மோக்ஷமாகிய பறை தருவார் என்கிற உயர்ந்த வேதாந்தார்தத்தை உபதேசிக்கிறாள்.

 

BLOG_-127775227810-Jan.jpg

திருப்பாவை பாசுரம் 1.3

முதல் பாசுரம், சரணாகதி மற்றும் மோக்ஷத்திற்கான பாசுரம் என்பதால், ஶ்ரீவைகுண்டத்திலிருக்கும், பரவாசுதேவனான நாராயணனைக் குறிப்பிடுகிறாள். இவ்வளவு பெருமை வாய்ந்த நாராயணனே, நந்தகோபன் குமரன் என்பதில், நந்தகோபன் என்பது ஆச்சார்யனைக் குறிக்கும். நாராயணன், ஆச்சார்யவருக்கு அடங்கியவராக, அவர் சொன்னால், நமக்கு மோக்ஷமளிப்பார் என்று ஆச்சார்யனின் மூலம்தான் பகவானை அடைய முடியும் என்ற கலியுகத்துக்குண்டான நியமத்தையும் உணர்த்துகிறாள்.

 

நல்ல என் தோழி நாகணைமிசை நம்பரர் 
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வதென்? 
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை 
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே    

 

நாச்சியார் திருமொழியில், ‘விஷ்ணுசித்தரான, தன் தந்தை மற்றும் ஆசார்யனான பெரியாழ்வார், தம் தேவரான கண்ணனை வருவித்து தருவார்’, என்று ஆசாசார்யன் மூலமாகவே பகவத் சம்பந்தத்தை நாடுகிறாள்.

 

'ஆச்சார்ய சம்பந்தம் மட்டுமே கலியுகத்தில் .. நாராயணன் அளிக்கும் பறையைப் பெற உதவும்' என்ற பகவானின் நியமனத்தை ஆண்டாள் முதல் பாசுரத்திலேயே தெளிவு படுத்துகிறாள்.

 

ஆச்சார்ய சிஷ்ய சம்பந்தம்:

 

கலியுக மாயையில் சிக்கி .. பகவானுக்கும் நமக்குமுள்ள சம்பந்தத்தை மறந்து .. அவரைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமின்றி .. லௌகீக விஷயங்களிலேயே நாம் ஆழ்ந்து விடாமல் .. நமக்கு சரியான பாதையைக் காட்டுவதற்காக .. பகவான் நமக்கு அளித்த வரப்பிரசாதமே கருணையே உருவான நம் ஆச்சார்யர்கள். சங்கிலித் தொடர் போல பகவானிடமிருந்து இன்று வரை குரு பரம்பரையாக நம்மை வழிநடத்த பகவானால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால், அவரவர்தம் ஆச்சார்யரிடம் முழு நம்பிக்கை வைத்து அவர் காட்டும் வழி நடக்க வேண்டும் என்கிற விருப்பத்தையும், முயற்சியையும் மட்டுமே நம்மிடமிருந்து பகவான் எதிர்பார்க்கிறார். 

 

ஒரு சாலையைக் கடக்க வேண்டுமென்றால் கூட, குழந்தைகள் தம் தம் பெற்றோரின் கையை நம்பிக்கையுடன் விடாமல் பிடித்திருந்தால்தான் பெற்றோரால் பத்திரமாக அவரவர் குழந்தையை .. சாலையைக் கடக்கச் செய்ய முடியும். பாதி வழியில், தன் பெற்றோரை நம்பாமல்.. பக்கத்தில் வரும் மற்றொரு குழந்தையின் பெற்றோரின் கையைப் பிடிக்கலாம் என்று தாவினாலோ .. அல்லது இருவர் கையையும் பிடித்துக் கொண்டே கடந்தாலென்ன என்று யோசித்தாலோ .. ஆபத்தில் முடியும். கடக்க ஆரம்பிக்கும் முன்னரே .. அனைவர் கையையும் மாற்றி மாற்றி பிடித்துக் கொண்டிருந்தாலும் பக்கவாட்டிலேயேதான் போய்க் கொண்டிருக்க முடியுமே தவிர .. முன்னேறிப் போக முடியாது. 

 

ஒரு சாலையைக் கடப்பதற்கே குழந்தை பெற்றோரை நம்பி அவரைத் தொட்ந்து அவர் காட்டும் வழியில் சென்றால்தான் பாதுகாப்பாக .. விரைவாகக் கடக்க முடியும் என்றிருக்கையில் ... சம்ஸாரமாகிய பெரிய கடலைக் கடப்பதற்கு .. அதற்கென்றே .. பகவான் தன்னிடமிருந்து சங்கிலித்தொடர் போல பயிற்சி அளித்து அனுப்பி வைத்த ஆச்சார்யர்களை முழுமையாக நம்பி .. அவர்கள் காட்டும் வழியில் நடந்தால்தால்தான் பிறவிப் பெருங்கடலைக் கடந்து .. பிறவாமை என்கிற அரும்பேற்றை அடைய முடியும்.

 

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் பாலமாக இருப்பவள் தாயாராகிய ஆண்டாள். கண்ணனையே ஓர் ஆசிரியை போல் எழுப்பிக் காத்தல் எனும் பெரும் பொறுப்பை நினைவு படுத்தியவள். அப்படிப்பட்டவள், ஸம்ஸாரக்கடலைக் கடக்க உதவும் ஆச்சார்யரின் கப்பலில் நம்மை ஏற்றும் முன் .. அதற்குண்டான தகுதி “கைங்கர்யத்தில் ருசி மற்றும் ஆச்சார்யரிடமும்  பகவானிடமும் இருக்க வேண்டிய திட விசுவாஸமே” என இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறாள். ஏனெனில் ஞானமென்னும் அன்னத்தினை அளிக்க பகவானும் ஆச்சார்யர்களும் எப்பொழுதுமே விருப்பத்துடன் இருந்தாலும் அதை அடைய நமக்கு 'ஆர்வம் எனும் பசியும்', 'அவர்கள் அன்னம் அளிப்பார்கள்' என்கிற நம்பிக்கையும் மட்டும் வேண்டும். 

 

ஆச்சார்யர்கள் ஸாஸ்திரங்களாகிய வழிகாட்டியைக் கற்றுத் தேர்ந்தவர்கள். பகவானின் உபதேசத்தை, வேதத்தின் ஸாரத்தை, தமிழ் வேதமாகிய ஆழ்வார் பாசுரங்களின் ஆழ்ந்த அர்த்தங்களையெல்லாம் தங்கள் தங்கள் ஆச்சார்யர்களிடமிருந்து உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள். தங்களுடைய ஞானம் அனுஷ்டானம் எனும் பலம் படைத்தவர்கள்.  ஆகையால் எத்தனை பேர் கப்பலில் ஏறினாலும் .. வழியில் என்ன தடங்கல் வந்தாலும் .. அனைவரையும் பாதுகாப்பாக அக்கரையான பகவானிடம் சேர்ப்பித்து ... நமக்கு நிரந்தர ஆனந்தத்தை அளித்து மகிழ்பவர்கள். நாம் செய்ய வேண்டியது .. ஆச்சார்யரிடம் திட விசுவாஸம் வைத்து .. கப்பலில் ஏறி .. அவர் காட்டுமிடத்தில் அமர்ந்து .. அவர் நமக்குச் செய்யும் பேருதவிக்கு நன்றியுணர்வுடன் .. நம்மால் இயன்ற கைங்கர்யங்களைச் செய்து வந்தால் போதும். கடமைக்காகச் செய்யாமல் .. நன்றியுணர்வுடனும் விருப்பத்துடனும் செய்யும் போதுதான் .. நாம் நிறைய செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகும்.

 

பகவானாகிய சூரியனால்தான் நம் உள்ளமெனும் தாமரையை மலர்த்த முடியும் என்றாலும், 'ஆச்சார்யன் திருவடி' எனும் _தண்ணீரின்_ சம்பந்தம் இல்லா விட்டால், அதே தாமரை சூரிய ஒளியைத் தாங்க முடியாமல் வாடி விடும். பகவானின் திருமுகமும்தான்.

 

ஆகவே, ஆண்டாள் காட்டிய பாதையின்படி ஆச்சார்ய சம்பந்தத்துடன், அவர் உபதேசப்படி நடந்து பகவானின் திருமுக மலர்ச்சியை அனுபவிப்போம்.

திருப்பாவை பாசுரம்  1.4

 

ஆண்டாள் இப்பாசுரத்தில், ‘கலியுகத்தில் பரமனை அடைவது ஸாத்தியமா என்கிற கவலை வேண்டாம்’ என்பதை ‘நந்தகோபன் குமரன் (ஆச்சார்யனுக்கு அடங்கியவன்), யசோதை இளஞ்சிங்கம் (அன்புக்குக் கட்டுப்பட்டவன்), கார்மேனி (கருணையே வடிவானவன்), செங்கண் (பாசத்திற்கு வசப்பட்டவன்), கதிர்மதியம் போல் முகத்தான் (பல மடங்கு சூரியனைப் போல் ஒளி படைத்தவன்; ஆனால் சந்திரனைப் போல் குளிர்ந்திருப்பவன், விரோதி நிரசனன்; பக்த வத்ஸலன்)’ என்று இத்துணை சௌசீல்ய ..சௌலப்ய குணங்களை உடையவரான அந்த பரவாசுதேவன் நாராயணனே (பிறவாமை என்கிற மோக்ஷம் அருளும் சக்தி படைத்தவன்) நமக்கே  பறை தருவான் என்று   நம்பிக்கை அளித்தாள்.

 

மற்ற யுகங்களில், அரக்கர்கள், ராக்ஷஸர்கள் என எதிரிகள் வெளியிலிருந்தார்கள். அதனால், அவர்களை வதம் செய்வது பகவானுக்கு எளிதாக இருந்தது. ஆனால், கலியுகத்தில், "அஹங்காரம், மமகாரம், பொய்மை" ஆகிய ரூபங்களில் எதிரி நம் உள்ளத்திலேயே இருப்பதாலும்,  உள்ளத்திலிருக்கும் பகவானை அடையாளம் கண்டு கொள்ளாமல் வெளியுலகையே பார்த்துக் கொண்டிருப்பதாலும் .. பகவான், நம் எதிரிகளைப் பற்றி நமக்கு உணர்த்தி, அதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று உபதேசம் செய்ய, கலியுகத்தின் தொடக்கத்திலேயே, ஆழ்வார்கள், ஆச்சார்யர்களை பிறப்பித்தார்.

 

கலியுகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அஹங்காரம் மற்றும் மமகாரமே. அதனால் "எது நல்லது" என்பது புரியாமல் மயங்கி பல வழிகளிலும், திக்கு, திசை தெரியாமல் செல்ல வைக்கிறது.

 

அஹங்காரம் என்னும் "நான், என்னால்" என்னும் எண்ணம்தான், தற்பெருமை பின்னர் கர்வம், அதனால் விளையும் போட்டி, பொறாமை அனைத்துக்கும் காரணமாகிறது.

 

மமகாரமாகிய "என்னுடையது" என்கிற எண்ணம் எதிலும் திருப்தியின்மையைக் கொடுத்து, பொதுநலனைக் கருதாமல், சுயநலத்திற்காக மட்டுமே செயல்பட வைக்கிறது.

 

பெயருக்காகவும், புகழுக்காகவும், தன்னுடைய சொத்து என்று சேர்க்க வேண்டும் என்பதற்காகவும்.. அதர்ம கார்யங்களிலும் ஈடுபட வைக்கிறது. அனைவரிடமும் பாரபக்ஷமில்லாமல் அன்பு காட்டுதல் என்கிற குணத்தை மாற்றுகிறது. கருணையைக் காட்ட விடாமல் தடுக்கிறது.

 

ரஜோ மற்றும் தமோ குணங்களின் பாதிப்பினால் மயங்கி,

 

பகவான் கலியுகத்தில் வரப்பிரஸாதமாக, நமக்களித்த ஆச்சார்யர்களிடமிருந்து, விலகி வெகுதூரம் செல்ல வைக்கிறது. 

 

க்ருத யுகத்தில், பகவானை நேரடியாக அணுகுவது ஸாத்தியம். த்ரேதா யுகத்தில் பக்தர்களைப் பற்றியும், த்வாபர யுகத்தில் ஆச்சார்யர்களைப் பற்றியும்.. பின்னர் பகவானை அணுகலாம்.

 

ஆனால் ரஜோ, தமோ குணங்கள் நிறைந்த கலியுகத்தில் (பகவானைக் காட்டிக் கொடுக்கும்.. ஸாஸ்திரப்படி உபதேசிக்கும்) ஆச்சார்யர்கள் மூலமாக மட்டுமே .. அஹங்கார மமகாரம் தொலைந்து பின்னர்தான்   தன்னை அடைய முடியும் என்று பகவான் விதித்திருக்கிறார். பகவான் தன்னை நேரே அணுகுவதை  விரும்புவதில்லை.

 

கலிகாலத்தில், பகவான் என்னும் காந்தம் ஒரு பக்கமும், கலி புருஷன் தங்குமிடங்கள் என்னும் காந்தம் மறு பக்கமும் இருக்கும். நாம் எந்தக் காந்தத்தின் பக்கம் அதிகம் செல்கிறோமோ, அந்தக் காந்தமே நம்மை மேன்மேலும் ஈர்க்கும்.

 

கருணையே உருவான நம் ஆண்டாள் தாயார் .. “ நாம் எவ்வாறு கலியுகத்தின் பாதிப்புகளிலிருந்து விலகி .. பகவானின் பக்கம் நம் சிந்தையைப் படிப்படியாக செலுத்தலாம் என்பதை .. அடுத்த பாசுரத்தில் .. சிறு குழந்தைக்குச் சொல்வது போல் .. எந்த கிரமத்தில் .. விட வேண்டியதை விட்டு பற்ற வேண்டியதைப் பற்றினால் .. ரஜோ, தமோ குணங்களின் பாதிப்பிலிருந்து விலகி சத்வ குணம் உயர்ந்து .. பகவானை நோக்கி மேன்மேலும் செல்லலாம்’ என்று அழகாக எடுத்துரைக்கிறாள்.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்

bottom of page