top of page
Photo from Jayasri Thothathri (2).jpg

திருப்பாவை

பகவதனுபவம் கிடைக்கும் நாளே நல்ல நாள். பெரியாழ்வாரிடம் கிருஷ்ணாம்ருதத்தையே பருகி வளர்ந்த ஆண்டாள் பாடிய திருப்பாவையை, அனுபவிக்க ஆரம்பிக்கும் இந்நாளே நன்னாள். 'வேத வேதாந்தத்தின் ஸாரமான திருப்பாவையையும், அதன் அர்த்தத்தையும் அறியா விட்டால், பிறவிப்பயனை எய்த முடியாது' என்ற பெருமை வாய்ந்தது திருப்பாவை.

நாமும் இந்த நல்ல நாளில், உள்ளத்தில் பக்தியை எளிதில் வளர்த்து, நம்மைக் கண்ணனின் பால் அழைத்துச் செல்லும் ஸ்வாமிகளின் உபன்யாஸத்திலிருந்து, திருப்பாவை அர்த்தங்களை அனுபவிக்க ஆரம்பிப்போம்.

ஆண்டாள் 'வையத்து வாழ்வீர்காள்' என்று நம்மை அழைத்து, நாராயணனைப் பற்றும் முறையையும், அப்பற்று விடாதிருக்க நாம் விலக்க வேண்டியவற்றையும் உபதேசிக்கிறாள். அவற்றை ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாசத்திலிருந்து அறிந்து கொண்டு பின்பற்றுவோம்.

ஆண்டாள் 'ஓங்கி உலகளந்த உத்தமன்' பேர் பாட நம்மை அழைக்கிறாள். சிறிய திருவடியைக் காட்டிப் பின்னர் ஓங்கி வளர்ந்த திரிவிக்ரமனை ஆண்டாள் உத்தமன் என்றழைக்கக் காரணம்? ஸ்வாமிகளின் இன்றைய சுவாரஸ்யமான உபன்யாஸத்திலிருந்து அறிந்து கொள்வோம்.

இன்றைய பாசுரத்தில், பக்தர்களுக்குத் தொண்டு புரியும் ஆசையுடன் வந்த வருண பகவானை, ஆண்டாள் "ஆழிமழைக் கண்ணா" என்றழைத்து எப்படி மழை பொழிய வேண்டும் என்றுரைத்தாள். இப்பாசுரத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை மழை போல் வருஷிக்கும் ஸ்வாமிகளின் உபன்யாசத்திலிருந்து அனுபவித்து மகிழ்வோம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில் "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" எப்படித் தொழ வேண்டும், அதனால் என்ன பலன் கிட்டும் என்று வராஹப்பெருமான் பூமாதேவியிடம் கூறியவற்றை எடுத்துரைத்தாள். பெருமானிடம் நம் நன்மைக்காகக் கேட்டுப் பெற்ற மூன்று விஷயங்களை, நமக்கு எடுத்துரைக்கவே பூமாதேவி ஆண்டாளாக அவதரித்தாள். கேட்டவற்றைக் கடைப்பிடிக்கும் ஆசையைத் தூண்ட வல்ல ஸ்வாமிகளின் உபன்யாஸத்திலிருந்து, அந்த ரகசியத்தைக் கேட்போம். கடைப்பிடிப்போம்.

இன்றைய பாசுரத்திலிருந்து தொடங்கி, ஆண்டாள் பாகவதர்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி, பத்து வகையான தூக்கத்திலிருக்கும் பெண்களை எழுப்புகிறாள். இன்று 'பிள்ளாய்' என்று ஒரு பெண்ணை அழைக்கும் காரணத்தையும், இருவருக்கும் நடந்த சுவையான உரையாடலையும், ஸ்வாமிகள் தனக்கே உரிய பாணியில் விவரிக்கும் அழகை அனுபவிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், அடுத்த பெண்ணை "பேய்ப்பெண்ணே" என்றழைத்து எழுப்புகிறாள். அப்பெண்ணிற்கு எதில் பேய்த்தனம்? கிருஷ்ணர் கோபிகைகள் பால் விட்ட இரண்டு வகை அஸ்திரங்கள் யாவை? ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்திலிருந்து அறிந்து கொண்டு, பாகவதர்களுடன் சேர்ந்து அனுபவிக்கப்பெறும் கிருஷ்ணானுபவம் பெறுவோம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில் கிருஷ்ணகாமம் மிகுந்த ஒரு பெண்ணை "கோதுகலமுடைய பாவாய்" என்றழைத்து எழுப்புகிறாள். லௌகீக காமத்திலிருந்து கிருஷ்ணகாமம் எவ்வாறு வேறுபட்டது? ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்திலிருந்து அறிந்து கொண்டு, அந்த கிருஷ்ணகாமம் நமக்கும் விரைவில் உண்டாக தேவாதிதேவனைப் பிராார்த்திப்போம்.

இன்றைய பாசுரத்தில் ஆண்டாள், கோபிகைகளைத் தன் உறவாகக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு ஒரு பெண்ணை "மாமான் மகளே" என்றழைத்து எழுப்புகிறாள். கண்ணன் கீதையின் கடைசியில் அவரை அடைய எளிய வழியாகச் சரணாகதியைச் சொன்னார். சரணாகதியைப் பற்றிய சரியான புரிதல் வர, சரணாகதி செய்தவர்கள் எதில் குதூகலத்துடன் இருக்க வேண்டும், எதில் சோம்பி இருக்க வேண்டும் என்பது பற்றிய அழகான விளக்கத்தை, ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்திலிருந்து கேட்டறிந்து கடைப்பிடிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், நோன்பில்லாமலே கிருஷ்ணானுபவம் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலியான ஒரு பெண்ணை, "சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" என்றழைக்கிறாள். பகவந்நாமங்களைப் பாடுவதே இனிமை. அதிலும் அந்த நாமங்களைப் பற்றிய வைபவங்களை உணர்ந்து பாடுவது அதைவிட இனிமை. நாமவைபவத்தில் நம்மைத் திளைக்க வைக்கக்கூடிய ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்திலிருந்து, ஆண்டாள் தன் பாமாலையில் நாமங்களை எந்த வரிசையில் கோர்த்திருக்கிறாள் என்கிற சுவையான அனுபவம் பெறுவோம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், தன் தர்மத்தின்படி நெறிமாறாமல் நடக்கும் ஒருவரின் மகளை "குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!" என்றழைக்கிறாள். 'ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள், தீயவர்கள் வாழ்கிறார்கள், எப்படி கண்ணனின்பால் ஈர்ப்பில்லாமல் இருப்பவர்கள், அவனைவிட வேறு இன்பம் இல்லை என்கிற நிலைக்கு வரமுடியும் போன்ற பல கேள்விகளுக்கு விடைகளை இன்றைய உபன்யாஸத்திலிருந்து அறியலாம். எளிய வகையில் நமக்குப் புரியும் வண்ணம் கணிதம், அறிவியல் உதாரணங்களைக் கொண்டு ஸ்வாமிகள் விளக்கும் பாங்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அவசியம் அனுபவிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், சாமான்ய தர்மத்தை விட்டு கிருஷ்ணனையே விசேஷ தர்மமாகப் பற்றிய ஒருவரின் தங்கையை, 'நற்செல்வன் தங்காய்' என்றழைக்கிறாள். 'பாகவதர்கள் வீடு தேடி வந்திருக்கிறோம், இனித்தான் எழுந்திராய்' என்று ஆண்டாள் அழைத்தபடி, நன்மை தேடி வரும்போதாவது எழுந்திருங்கள் என லௌகீக இன்பத்தில் மூழ்கி இருக்கும் அனைவரையும் தட்டி எழுப்பி திருமால் வெள்ளத்தில் மூழ்க வைக்க வல்லது ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாசம். இன்று கிருஷ்ணானுபவத்தோடு மனதிற்கினிய ராமானுபவமும் காத்திருக்கிறது.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், கண்ணனை உள்ளடக்கிய அழகிய கண்ணுடைய ஒரு பெண்ணை 'போதரிக் கண்ணினாய்' என்றழைத்து, கண்ணனைத் தங்களோடும் சேர்த்து வைக்க வேண்டுகிறாள். அனைத்து வகைப்பட்டவருக்கும் அவரவருக்கு உகந்த வழியைக்காட்டி, அனைவருக்கும் மனத்துக்கினியவராக இருப்பவர் காரேய் கருணை இராமானுஜர். ஆண்டாள் திருப்பாவையில், பிற்காலத்தில் தன் அண்ணனாக வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரைக் கொண்டாடும் அழகை, ஸ்வாமிகளின் மனத்துக்கினிய உபன்யாஸத்தில் இன்று அனுபவிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், பேச்சு வன்மையால் கண்ணனை ஈர்க்க வல்ல ஒரு பெண்ணை 'நாவுடையாய்' என்றழைத்து கண்ணனிடம் தங்களுக்காகவும் பேசி சேர்த்து வைக்க வேண்டுகிறாள். ஆச்சார்யர்களின் அருட்பார்வை மற்றும் உபதேசமே நம்மைக் கண்ணனின் பால் அழைத்துச் செல்லும் என்பதை ஆண்டாள் இரண்டு பெண்களைக் கொண்டு அழகாக எடுத்துரைக்கும் விதத்தை ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், தோழிகள் பாடிய கிருஷ்ண நாமத்தைக்கேட்டுத் தானும் அவ்வாறே பாடிய ஒரு பெண்ணை 'இளங்கிளியே' என்றழைக்கிறாள். தானாக இனிமையாகப் பாடும் குயிலை விட, சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிக்கென்ன ஏற்றம்? ஆண்டாள் இப்பெண்ணின் மூலமாக 'நானேதானாயிடுக' என்கிற மிக உயர்ந்த பண்பை, நமக்கு எவ்வாறு உணர்த்துகிறாள்? இவற்றுடன், பேச்சு வன்மை என்பது யாது, பலவகைப்பட்ட பேச்சுக்கள் எவை, எங்கு எவ்வாறு எப்படிப் பேச வேண்டும் போன்ற பல விஷயங்களைத் தன் இனிய பேச்சால் அனைவரையும் ஈர்க்க வல்ல ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

பத்து பெண்களை எழுப்பிக்கொண்டு நந்தகோபனுடைய திருமாளிகைக்கு வந்த ஆண்டாள், இன்றைய பாசுரத்தில், 'நந்தகோபனுடைய கோயில் காப்பானை, கண்ணனிடத்திலே நேசமும் பாசமும் உண்டான நிலைக்கதவை நீக்கும்படி வேண்டுகிறாள். ஆச்சார்யர்களைப் பற்றி, பகவத் ராமானுஜர் திருவடிகளைப் பற்றி, அவர் திறந்து விட பகவானிடத்தே செல்ல வேண்டும் என்று ஆண்டாள் பகவானைப் பற்றும் முறையைக் காட்டியதையும், ஆண்டாளைப் போல் யார் யாரெல்லாம் இளங்கிளிகளாய் ஆற்றலுடன் பேசும் வல்லமை படைத்தவர்கள், அவர்களின் பேச்சாற்றலால் விளைந்த நன்மைகள் ஆகியவற்றைப் பற்றிய சுவையான விஷயங்களை ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், அனைத்து வகை தானத்திலும் தலைசிறந்தவராக விளங்கிய நந்தகோபனிடமும், குலவிளக்காக இருக்கும் யசோதாவிடமும், செம்பொற்கழலடி கொண்ட பலராமரிடமும் தங்களுக்கு அனைத்துமாக இருக்கும் கண்ணனையே தந்தருளும்படி வேண்டுகிறாள். இப்பாசுரத்தில் பெருமானையே நமக்குத் தந்தருளும் ஆச்சார்யனைக் கொண்டாடுகிறாள். வராஹராக, ராமராக, கிருஷ்ணராக, அர்ச்சா மூர்த்திகளாகப் பெருமான் தந்தருளிய வார்த்தைகளைத் தன் தந்தையான பெரியாழ்வார் சொல்லக் கேட்டதை ஆண்டாள் அழகாக எடுத்துரைப்பதையும், அதன்படி தூய்மையாக வருவதென்பது யாது என்பதையும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவித்து மகிழ்வோம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், நமக்கும் பெருமானுக்குமிடையே பாலமாக இருக்கும் தாயாரை முதலில் பற்றியே பின்னர் பெருமானைப் பற்ற வேண்டும் என்று நம் அனைவருக்கும் நல்வழிகாட்டுகிறாள். நீளாதேவியின் அம்சமான நப்பின்னை பிராட்டியைக் கதவைத் திறந்து, கண்ணனோடு தங்களைச் சேர்த்து வைக்க வேண்டுகிறாள். ஸ்வாமி எம்பெருமானார் உகந்த இப்பாசுர வைபவம், அதனால் திருப்பாவை ஜீயர் என்றே பெயர் பெற்ற வைபவம், ஆச்சார்யர்களும் சிஷ்யர்களும், ஆழ்வார் பாசுரங்களை உள்ளத்தில் ஆழப் பதித்து அனுபவித்து வந்ததால் எப்படி ஒருவர் உள்ளத்தின் அனுபவத்தை மற்றவரால் உணர முடிந்தது என்பதையும், நாமும் கூட உணர்ந்து அனுபவிக்கும்படி ஸ்வாமிகள் எடுத்துச் சொல்லும் விதத்தில் இன்றைய உபன்யாஸமும் ஓர் இனிய அனுபவம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், பிராட்டியை முன்னிட்டுப் பெருமானைப் பற்றியபின் இருவரிடமும் தங்களுக்கு அருள் புரியும்படி வேண்டுகிறாள். சேர்த்து வைக்க சிறிது தாமதமானதால் நப்பின்னை பிராட்டியுடன் ஆண்டாளின் சிறிய ஊடல், சீதா பிராட்டியின் அருளால் ராமரிடம் ஆஞ்சநேயர் பெற்ற பரிசு, சிறிய குற்றமே என்றாலும் பிராட்டி அருகில் இல்லாததால் ராமரால் தண்டிக்கப்பட்டவர்கள், பிராட்டியுடன் சேர்ந்து இருந்ததால் மஹாபாவம் செய்தும் தப்பியவர்கள், ஆச்சார்யரின் குணங்கள், அவர் நமக்குச் செய்யும் பெரும் உபகாரங்கள் என்று ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸம் முழுவதும் திகட்டாத இனிய அனுபவம். அவசியம் அனுபவிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், தங்களுக்காக வேண்டும் தேவர்களுக்கு உதவும் கண்ணனிடம் "உன் அனுபவத்தையே பிரார்த்திக்கும் எங்களுக்கும் உதவுவாய்" என்று கேட்கிறாள். பெருமானை நோக்கிப் போகாமல் உலக இன்பத்தைத் தேடிப் போகும் நம்மை அருளாலே திருத்தி, நம் பாபத்தைப் பார்த்துக் கோவத்தால் அருள்புரிய மறுக்கும் பெருமானை நம்மை மன்னித்து அருளும்படி ஆக்கி, தாயார்தான் இருவரையும் சேர்த்து வைக்கிறார். அப்படிப்பட்ட தாயாரின் பெருமையையும், கண்ணன் கீதையில் சொன்னதை வரிசை மாறாமல் எப்படி ஆண்டாள் திருப்பாவையில் சொல்லியிருக்கிறாள், நம்மிடம் எத்தனை வகை இருட்டுக்கள் உள்ளன, அந்த இருட்டுக்களைப் போக்கவல்ல விளக்குகள் யாவை என்பவற்றையெல்லாம் நம் அறியாமை இருட்டைப் போக்கி, நமக்குள் கிருஷ்ணானுபவத்தைப் பிரகாஸப்படுத்தும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

நப்பின்னை பிராட்டியைப் பற்றிய துணிவுடன், ஆண்டாள் இன்றைய பாசுரத்திலிருந்து தொடங்கி கண்ணனுடன் நேரே உரையாட ஆரம்பிக்கிறாள். 'உன் குணங்களுக்குத் தோற்ற நாங்கள் என் தந்தையான பெரியாழ்வாரைப் போல் உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடவும், மற்ற ஆழ்வார்களைப் போல் புகழவும் வந்திருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள எழுந்திராய்' என்று வேண்டுகிறாள். இப்பாசுரத்தின் மூலம் ஆண்டாள் தந்தருளிய அர்த்தங்கள், நம்மைத் திகைக்க வைக்கும் பகவத்குணங்கள் பலப்பல. கோகுலத்துப் பசுக்கள் பால் சுரப்பதைப்போல் ஆச்சார்யர்கள் அனைவருக்காகவும் பொழிந்த அற்புத அர்த்தங்களை, நமக்கும் கிடைக்கும்படிப் பொழியும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸம் கிருஷ்ணகுணானுபவ ஸாகரம். அனுபவித்து மகிழ்வோம்.

நேற்றைய பாசுரத்தில் பெருமானை எழுந்தருள வேண்டிய ஆண்டாள், இன்றைய பாசுரத்தில் நம் பாபத்தைப் போக்கவல்ல பெருமானின் கடாக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள். சந்திரனைப் போன்ற பார்வையால் நம்மைக் குளிர நோக்கி சூரியனைப் போன்ற பார்வையால் நம் அறியாமை எனும் இருட்டைப் போக்குமாறு வேண்டுகிறாள். பகவானை அடைவதற்கு ஆறு படிக்கட்டுகள் உள்ளன. அவற்றை, பெருமானின் குணங்களை விவரிப்பதன் மூலம் நம் ஸ்வ அபிமானத்தைத் தொலைத்துப் பெருமானின் கடாக்ஷத்தைப் பெற்றுத்தரும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில் சிங்கத்தின் வலிமையும், பூவின் மென்மையும் ஒருசேர இருக்கும் கண்ணனின் நின்ற, நடந்த, இருந்த அழகையெல்லாம் சேவிக்க விரும்பி, சிங்காசனத்தில் வந்து அமரும்படி வேண்டுகிறாள். இலக்கு ஒன்றாக இருப்பதால், தப்பிப்பதற்காக இலக்கின்றி வேகமாக ஓடுகிற மானையும் சிங்கத்தால் எளிதில் வேட்டையாட முடிகிறது. அதுபோல் நம் இலக்கும் ஒன்றாக இருந்தால் எளிதில் அடைந்து விடலாம். அந்த ஒரு இலக்கு எது, எப்படி அடையலாம் என்பதோடு சிங்காசனத்தின் ஏற்றத்தையும், ராகவ, யாதவ, நரசிம்ம, ரங்கேந்திர சிம்மங்களின் பலவிதமான அற்புத நடை அழகின் அழகிய வர்ணனையையும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

இன்றைய பாசுரத்தில் ஆண்டாள், தாம் அழைத்ததற்காக நடந்து காட்டிய கண்ணனின் திருவடிகளுக்குப் பரிந்து பல்லாண்டு பாடுகிறாள். தன் தந்தையின் சொத்தான மங்களாசாசனத்தைப் பெற்ற ஆண்டாள், பெரியாழ்வாரின் பெண் என்று நிரூபித்த பாசுரம். அடி, கழல், தாள், பாதம், சரணம் என்று திரிவிக்ரம, ராம, கிருஷ்ண அவதாரங்களில் பெருமானின் திருவடியின் பல நிலைகளைச் சூழ்ந்திருந்து போற்றினாள். அனுபவிக்கும் விதத்தையும் சொல்லிக் கொடுத்து, அனுபவிக்கவும் வைக்கும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் ஆண்டாள் நம் நாவுக்கு உகந்த அறுசுவையாகப் பாடியருளிய ஆறு போற்றிகளைப் பற்றி அனுபவிப்போம். தினமும் தவறாமல் பாடுவோம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், உலக ஆசைகளைத் தொலைத்து பகவதனுபவத்தில் நம்மை மகிழவைக்கக் கண்ணனைப் பிரார்த்திக்கிறாள். கிருஷ்ணர் கீதையில், தன் திவ்யமான பிறப்பையும் வளர்ப்பையும் அறிந்தவர்களுக்கு மறுபிறவியில்லை என்று சொன்னதை மனதில் கொண்ட ஆண்டாள் கிருஷ்ணரின் அவதார ரஹஸ்யத்திற்கும், அவர் லீலைகளுக்குமாகவே பாடிய பாசுரம். நமக்குள் அந்தர்யாமியாக ஒளிந்திருந்து கண்ணன் என்ன செய்கிறார்? கிருஷ்ணரின் அவதார ரஹஸ்யம்தான் என்ன? இவற்றுடன் இனிய கிருஷ்ணலீலைகளையும் சேர்த்து ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

இன்றைய பாசுரத்தில் ஆண்டாள் கண்ணனிடம் நோன்பிற்கு வேண்டிய உபகரணங்களைப் பிரார்த்திக்கிறாள். தன்னிடம் வேறு எதையும் வேண்டாமல் தன்னையே வேண்டி வந்த சிறுபெண்களைக் கண்ட கண்ணன் உள்ளம் உருகி பேச முடியாமல் இருந்த நிலையைக் கண்ட ஆண்டாள் 'மாலே!' என்றழைத்துக் கண்ணனின் எளிமை, அழகு, மேன்மை அனைத்தையும் கொண்டாடுகிறாள். ஆழ்வார்கள் அனுபவித்த 'மால்', பக்தி யோகத்திற்கும் சரணாகதிக்கும் உள்ள வித்தியாசம், ஶ்ரீீீீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் நீராட்ட உற்சவ அனுபவம் அனைத்தையும் பக்தர்கள் மேல் பித்தாக இருக்கும் மாலின் மேல் பித்துக் கொள்ள வைத்து நம்மை மால் வெள்ளத்தில் ஆழ்த்தும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

ஆண்டாள் இன்றைய பாசுரத்தில், பகவானுடன் கூட மாட்டோம் என்றிருப்பவரையும் தன் வெவ்வேறு குணங்களைக்காட்டி வென்றுவிடும் கோவிந்தனிடம், நோன்பிற்கான சம்மானங்களைப் பிரார்த்திக்கிறாள்.

அக்காரஅடிசிலாக இருக்கும் பகவானை அனுபவிக்கத் தேவையான பசியையும், ஆர்வத்தையும் கிளப்பி விடக்கூடியது ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸம். நம்மை அனுபவிக்கக் காத்திருக்கும் பெருமானின் குணங்கள் பலவற்றை அனுபவிப்பதோடு, யார் யாரை எந்தெந்த குணங்களைக்காட்டி வென்றார் என்பதையும் இன்று அனுபவிப்போம். நாம் பகவானுக்கு அந்த சிரமத்தைக் கொடுக்காமல் அவன் குணங்களுக்குத் தோற்று அனைவரோடும் கூடியிருந்து குளிர்வோம். பக்தியின் மூன்று நிலைகளை அறிந்து பகவானை நோக்கி முன்னேறுவோம்.

கண்ணன் கீதையின் கடைசியில் அவரை அடையும் எளிய வழியாகக் காட்டிய சரணாகதியை, ஆண்டாள் இன்றைய பாசுரத்தில் நமக்காக அனுஷ்டித்துக் காட்டுகிறாள். அடைய வேண்டிய மிக உயர்ந்த இடமும் கண்ணனே, அடைவிப்பவரும் அவரே என்பதை நமக்குணர்த்துகிறாள். குறையொன்றுமில்லாத கோவிந்தனிடம், 'அவன் திருவடியைத் தவிர வேறு புகல் இல்லை' என்ற அறிவைத் தவிர, வேறு அறிவொன்றுமில்லாத எங்களை ரக்ஷிப்பாய் என வேண்டுகிறாள். மந்திரங்களுக்குள் ரத்தினம் என்ற பெருமையுடையது த்வயமஹாமந்திரம். நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கவல்லது. இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் அளவிலா ஆனந்தத்தைத் தரவல்லது. அப்படிப்பட்ட மந்திர ரஹஸ்யத்தை ஆண்டாள் இப்பாசுரத்தில் எப்படி அழகாக எடுத்துரைக்கிறாள், இவ்வுலக கஷ்டங்கள் மனதிலே படாத அளவிற்கு மனதை உயர்த்தி விடுகிற ஸ்வாமி ராமானுஜ சம்பந்தத்தை எப்படிப் பெறுவது? அனைத்தையும், பகவானுக்கும் நமக்குமுள்ள சம்பந்தத்தை மனதில் பதிய வைத்து, அவனை அடையும் ஆசையைத் தூண்டிவிடும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம்.

கண்ணனை அடைய நாம் விட வேண்டியவற்றையும் பற்ற வேண்டியவற்றையும் நேற்றைய பாசுரத்தில் எடுத்துச் சொன்ன ஆண்டாள், அதன்படி செய்த சரணாகதர்களுக்குக் கண்ணன் செய்ய வேண்டியதை இன்றைய பாசுரத்தில் சொல்கிறாள். பக்திப் பயிர் வளர வேண்டுமென்றால், அவனைத்தவிர மற்ற விஷயங்களில் இருக்கும் ஆசையாகிய களையை எடுக்க வேண்டும். ஆதலால் "மற்றை நம் காமங்கள் மாற்று" என்று பிரார்த்திக்கிறாள். அவனுக்கே தொண்டு செய்யும் பாக்கியம் அருள வேண்டுகிறாள். தூய்மையும் இனிமையும் மிக்க கண்ணனின் பொற்றாமரை அடியைப் பற்றினால், எப்படி நம் இதர ஆசைகளை மாற்றி அவன் பால் ஈர்ப்பான் என்பதையும், த்வய மஹாமந்திரத்தின் இரண்டாவது பகுதியை ஆண்டாள் ஆறு பகுதிகளாக இப்பாசுரத்தில் பிரித்து வழங்கிய அழகையும் ஸ்வாமிகளின் இன்றைய உபன்யாஸத்தில் அனுபவிப்போம். காரணம் புரியாத சில நிகழ்ச்சிகள் நடக்கும்பொழுது அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்ற, நமக்கு இன்றைய காலத்தில் மிகவும் தேவையான விஷயத்தையும் அறிந்து பயன்பெறுவோம்.

பெரியாழ்வாரிடமிருந்து ஆண்டாள் அடைந்து அனுபவித்த கிருஷ்ணாம்ருதமே இனிய திருப்பாவையாக வெளிவந்தது. இருபத்தொன்பது பாசுரங்களை இடைச்சி பாவனையில் கோபிகையாக அனுகரித்துப் பாடிய ஆண்டாள், கடைசி பாசுரத்தைப் பெரியாழ்வாரின் பெண் கோதையாகப் பாடுகிறாள். திருப்பாவையைச் சொல்பவர்கள் எங்கும் ஶ்ரீமந்நாராயணனின் திருவருள் பெற்று இன்புறுவர் என்று பலன் சொல்லி முடிக்கிறாள். கோபிகையாக நினைத்து நடந்த ஆண்டாளுக்குக் கண்ணனின் பேரன்பு கிடைத்தது. ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலையை விரும்பிய கண்ணன், ஆண்டாள் பாடிய பாமாலையான திருப்பாவையைப் பாடும் நமக்கும் அந்த அன்பைத் தரக் காத்திருக்கிறார். திருப்பாவை தனியனில் 'ஆண்டாள் அரங்கற்குப் பாடிய திருப்பாவை' என்றிருக்கிறது. கடைசி பாசுரத்தின் அர்த்தத்தையும், திருப்பாவையின் அனைத்து பாசுரங்களிலும் ஆண்டாள் எப்படி அரங்கனையேதான் பாடியிருக்கிறாள் என்பதையும் செவிக்கும், மனதிற்கும் இனிய ஸ்வாமிகளின் உபன்யாஸத்தில் அனுபவித்து மகிழ்வோம்.

bottom of page